எம்.ஜி.ஆர் : முழு வரலாறு ! Posted by வினவு

எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

மிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும்  சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்.  தமிழ்ச் சமுதாயத்தை  சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக,  சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.

எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்

இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும்  காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்”  என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’,  ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.

எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி.  கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.

எம்.ஜி.ஆர் கவர்ச்சி அரசியல்