ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – சத்யானந்தன்

ராமாயணம்

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)

சத்யானந்தன்

பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருவது ராமாயணம். இந்தியாவில் ராமாயணம் பெரிதும் புனித நூலாக மத நூலாக பக்தியுடன் வாசிக்கப்படுவது. அதே சமயம் ஆராய்ச்சியாளர்களும் இலக்கியவாதிகளும் பல விவாதங்களுக்கு ராமாயணத்தை ஒரு ஆதாரமாகவும் துவங்கு புள்ளியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனின் சாப விமோசனம் ஒரு உதாரணம். இன்னொன்று சமீபத்தில் வெளி வந்த ராவணன் திரைப்படம். பக்தி செய்பவர்களை விட அதிகமாக ராமாயணம் என்னும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுப்போர் ஆராய்ச்சிக்காகவும் இலக்கிய நயத்துக்காகவும் பண்பாடு பற்றிய புரிதலுக்காகவும் மீண்டும் மீண்டும் வாசிப்போரே. குறிப்பாக கம்ப ராமாயணம் பல்வேறு பரிமாணங்களில் ரசனைக்குரியது. வெவ்வேறு மொழிகளில், பண்பாடு மற்றும் பூகோளப் பின்னணியில் ராமாயணம் பல வண்ணமும் மணமும் உடைய நந்தவனங்களாய் நம்மை ஈர்க்கும்.

ஒரு காவியத்தை வாசிக்கும் அனுபவமும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கமும் வித்தியாசமானவை. ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் முன்னோரின் காலம் பற்றிய முக்கியமான ஆவணமாகக் காவியம் திகழ்கிறது. எனவே நம் காவியங்களுள் தலையாய இரு இதிகாசங்களில் மூத்ததான ராமாயணம் அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் கதையின் போக்கிலும் நம்மைப் பாத்திரங்களோடு ஒன்ற வைக்கிறது. ஏனெனில் இன்றும் நமது குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் நிகழும் பரிமாற்றங்களில் நாம் ராமாயண கதாபாத்திரங்களுள் ஒன்றாக நிற்கிறோம்.
மகாபாரதம் தற்காலச் சூழ்நிலைக்கு மிகவும் அருகாமையிலுள்ளதாகவும் ராமாயணம் இலட்சியவாதமும் தியாகமும் பற்றிப் பேசுவதாகவும் ஒரு கருத்து உண்டு. ஆனால் ராமாயணத்தை நுட்பமாக வாசிக்கும் போது மகாபாரத்துக்கு இணையாக பல்வேறு அதிகாரப் பகிர்வுக்கான போட்டி பொறாமை மற்றும் யுத்தங்களைக் காண்கிறோம். இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.

முதலாவது கைகேயி தனது மகனுக்கு (பரதனுக்கு) நாடாளும் உரிமை கோரியது. அதைக் கோரிய விதமும் அவள் இட்ட ஷரத்துக்களும். இரண்டாவது சீதை மாரீசனின் குரலை ராமனின் குரல் என்றெண்ணி உடனே கிளம்பாத இலக்குவனை வெறுப்புடன் சந்தேகப்படுகிறாள்.

இந்த இரண்டுமே இந்த நங்கையரின் பின்னணி மற்றும் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சால்புகளைப் பார்க்கும் போது மிகவும் கசப்பும் தரக்குறைவுமானவை. எனவே ராமாயணம் மனித உறவுகள் பற்றிய மிகப்பெரிய ஆவணமாய் நம்முன் நிற்கிறது. பாத்திரங்கள் கடவுள் அவதாரமாக அன்றி மானிடராய் இயங்குகின்றனர்.

மனித உறவுகள் பற்றிய மேற்கத்திய அணுகு முறைக்கும் தொன்மை இந்தியாவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு தர்மம் பற்றியதாகும். தர்மம் என்பதை ஆங்கிலத்தில் ethics என்று ஒப்பிடுவது மிகவும் பொருத்தம்.

ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிகாசங்களில் தர்மம் என்பது கிட்டத்தட்ட எல்லா கதாப் பாத்திரங்களின் செயல்களுக்குக் காரணியாக அமைகிறது. தர்மம் அல்லாதது அதர்மம்.

ஆனால் தர்மம் (மனசாட்சி மற்றும் பொறுப்பு தொடர்பான கடமை) ஒருவரது குலம், பதவி, உறவு, சூழல், எடுத்துக் கொண்ட பணி என பலவேறு பரிமாணங்களில் காணப் படுகிறது. அரசனின் கடமை, போர் வீரனின் கடமை என்பதெல்லாம் க்ஷத்திரிய தர்மத்தின் கீழ் வருகிறது. கொடுத்த வாக்கை காப்பது எல்லோருக்கும் பொதுவான தர்மம் ஆகிறது.

எளிதாகத் தோன்றும் தர்மம் அதைக் காப்பாற்றி ஒழுகும் போது சிக்கலாக ஆகி விடுகிறது. ஏனெனில் ஒரு அரசன் ஆள்பவன் மட்டுமல்ல; ஒரு தகப்பன், கணவன் மற்றும் கொடுத்த வாக்குக்குக் கட்டுபட்டவன். ஒரு மகன் தனது தாய், சித்தி, தந்தை யார் சொல்லுக்கும் கட்டுப்பட வேண்டியவனே. ஒருவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இன்னொருவரின் சொல்லை மீற வேண்டி வந்தால்? ஒரு வகையில் தர்மத்தின்படி செயற்பட்டு இன்னொரு விதத்தில் தர்மம் தவறினால்? இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட ராமாயணம் முழுக்கத் தென்படுகிறது. பல இடங்களில் நாம் இதைக் காண்கிறோம். எனவே ஒரு படிப்பினை நூலாக மதநூலாக ராமாயணத்தைக் காண்போர் அதன் நுட்பமான செய்தியை உள்ளே நிகழும் போராட்டத்தைச் சித்தரிக்கும் அற்புதமான காவிய ரசனையை இழக்கிறார்கள்.

ஆழ்ந்து நோக்கும் போது ராமாயணத்தின் பல பிரதிகளில்(அனேகமாக எல்லாவற்றிலும்) ராமன் துவக்கத்தில் ஒரு அவதாரமாகவே சித்தரிக்கப்படுகிறான். மனிதனாக இளவரசனாக எவ்வளவோ தவ வலிமைகள் பெற்று பல திவ்யாஸ்திரங்கள் எனப்படும் ஆயுதங்களைப் பெற்றவனாகத் திகழ்கிறான்.

இருந்தும் தனது மனையாளை அபகரித்த இராவணனிடமிருந்து அவளை மீட்கும் பணியை பல்வேறு கட்டங்களாகத் தொடர்ந்து இறுதியிலேயே தனது பகைவனை வெல்கிறான். சீதையும் தனது தாயான பூமாதேவியை அழைக்காது அல்லலுறுகிறாள்.

இது எவ்வளவு பெரிய முரண் ? தண்டிக்கப்பட வேண்டியவனைத் தண்டித்து, மீட்கப்பட வேண்டியவளை மீட்டுத் தனது கடமையினின்று வழுவாது நிற்க வேண்டிய பராக்கிரமசாலியான ராமன் ஏன் இந்த அளவு நீண்ட, சுற்றி வளைத்த, இடர்கள் நிறைந்த ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ராமன் எடுத்த முடிவுகளில் எது வழிகாட்டி ஆனது ?

எதை வழிகாட்டுதலாக ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும்? தனது விருப்பு வெறுப்புகள் அல்லது நியாயமான ஆசைகளை ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும் ? தனது விருப்பங்கள் மற்றும் கடமை கட்டுப்பாடுகள் இணையும் ஒரு புள்ளியில் தொடங்க வேண்டுமா ? அல்லது தனது சுய விருப்பங்கள் என்ற ஒன்றையே புறக்கணித்துத் தனக்குக் காட்டப்படும் வழியில் செல்ல வேண்டுமா?

தனிமனிதனா? சமுதாய அங்கமா?
எது ஒருவரின் அடையாளம்?

இந்தக் கேள்வி ராமாயணத்தால் மிக அழுத்தமாகத் துவக்கப்பட்டது. அதற்கான விடைகள் இன்று வரை முடிவானதாயின்றி சிந்தனையைத் தூண்டுகின்றன. ராமாயணம் முழுக்க முழுக்க இந்தக் கேள்விக்கான வெவ்வேறு விடைகளும் அதன் விளைவான குடும்ப, சமுதாய, அரசியல் நிகழ்வுகளும் மனப்போராட்டங்களும் விரவிக் கிடக்கின்றன.

விடைக்கான தேடலில் ஒவ்வொரு காண்டமாக நாம் ராமாயணத்தை ஒரு மறு வாசிப்புச் செய்வோம்.

மூலப்பிரதி எனக் கருதப்படும் வால்மீகி ராமாயணத்தையும், செவ்வியல் அழகு மிளிரும் கம்பராமாயணத்தையும், பக்தி மயமான (சூர்தாஸின்) ராமசரித்மானஸையும் இந்தக் கேள்வியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த வாசிப்புச் செய்வோம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2

சத்யானந்தன்

பால காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

பாலகாண்டத்தில் மனப்போராட்டமோ அல்லது தனிமனித மற்றும் சமுதாய அடையாளத்திற்கும் இடையிலான தேர்வுக்கோ பாத்திரங்கள் தள்ளப்பட்ட சூழ்நிலைகள் குறைவே.

முதல் சோதனை விசுவாமித்திரரின் வடிவில் தசரதருக்கு வருகிறது. தாடகை மற்றும் பல அரக்கர் முனிவர்களது தவத்துக்கு ஊறு விளைவிக்கின்றனர். அப்போது ராமனை அரக்கர்களுடன் யுத்தம் செய்யவென அழைத்துச் செல்ல விசுவாமித்திரர் விரும்புகிறார். அப்போது இரண்டு காரணங்களில் அவர் சொல்லை மீற முடியாது. ஒன்று ரிஷி முனிவர்கள் பேச்சுக்கு அரசர் கட்டுப்பட்டவர். மற்றொன்று முனிவருக்குப் பாதுகாப்புத் தர வேண்டியது மன்னர் கடமை.

ஆனால் தசரதனுக்கோ
” எண் அலா அருந்தவத்தோன் இயலிய சொல்
மருமத்தில் எறிவேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
லெனச் செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசலாட
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடுந்துயரம் காணவேலான்”

கம்பராமாயணம் வேலினால் ஏற்பட்ட புண்ணின் மீது நெருப்பு பட்டது போலவும், கண்ணைப் பெற்ற பார்வையற்ற ஒருவர் பட்ட வருத்தத்தைப் போலவும் இருந்ததென்கிறது.

வால்மீகி ராமாயணத்திலோ தசரதர் மூர்ச்சையே அடைந்து விடுகிறார்.
‘தச்ச்ருத்வா ராஜ ஸார்தூலோ விஸ்வாமித்ரஸ்ய
முஹூர்த்தமிவ நிஸ்ஸ்ம்யஞ ஸன்ஞ்ஞாவா நிதம்ப்ரவீத்”

(ஸர்க்கம் 20 சுலோகம் 1)

மேலும் பல விதமாகவும் ராமனை அனுப்ப இயலாது என்பதைக் கூறி ஏன் தன்னை வைத்து அந்த ராட்ச்சர்களை அடக்கக் கூடாது என வாதிடுகிறார். இந்த அளவுக்கு கம்ப ராமாயணத்தில் வாதிடவில்லை.

அதே போல் தசரதன் சொன்னதைக் கேட்டு வால்மீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் விசுவாமித்திரர் மிகுந்த கோபம் கொள்கிறார். கம்பராமாயணத்தில் அவரது கோபத்தை உணர்ந்து வசிஷ்டர் இடை மறிக்கிறார். திடமான மனநிலை இல்லாத தசரதனை ஏசுகிறார். ராமசரிதமானஸிலோ தசரனது நிலையைப் புரிந்து கொள்கிறார். அதிகம் கோபமே படவில்லை.

ராமசரிதமானஸ் ” சுபசுத் ப்ரிய மோஹி ப்ராண்கி நாயி ராம் தேத் நஹி பனை கோசாயி’ ( பக்கம் 176- 1936 வது வருட பதிப்பு – அலஹாபாத் ராமநாராயணலால் வெளியீடு). எல்லா மகன்களும் எனக்கு உயிரிலும் பிரியமானவர்கள் எனினும் ராமனை அனுப்ப இயலாது என்கிறார்.

இதன் தொடர்ச்சியாக தாடகை வதத்தில் ஷத்திரிய தர்மமா குருவின் ஆணையா என்னும் கேள்வி எழுகிறது. இரண்டு கட்டாயக் கடமைகள் எதிரெதிரே நிற்கின்றன. குரு பீடத்தில் உள்ளவர் சொல்வதற்காக அவளைக் கொல்லலாம். அல்லது ஷத்திரிய தர்மப்படி அவளைக் கொல்ல மறுக்கலாம்.

பால காண்டம் 388வது பாசுரத்தில்
“ஐயன் அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால்
மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ அறம் செய்யும் ஆறு என்றான்.”

அதாவது நீர் கட்டளை இட்டால் உன் சொல்லே வேதம் எனக் கொண்டு அறமல்லாத செயலையும் செய்வதே அறம். எனவே குருவின் சொல்லுக்குக் கீழ்ப்படியும் அறம் பெண்ணைக் கொல்லாமை என்னும் அறத்தை விஞ்சுகிறது.

வால்மீகி ராமாயணம் 25வது ஸர்க்கம் 24வது சுலோகத்தில்
“அதர்ம ஸஹிதா நார்யோவாதா: புருஷ ஸத்தமை:
தஸ்மாதே நாம் க்ருணாம் த்யத்வா ஜஹீ மச்சாஸநாந்ருப”

இதன் பொருள் “ பல தர்மாத்மாக்களும் புருஷ சிரேஷ்டிரர்களுமான ராஜகுமாரர்கள் அதர்மத்தையே செய்து வந்த ஸ்திரிகளைக் கொன்றிருக்கிறார்கள். ” என்னும் விளக்கம் வருகிறது. ராமசரிதமானஸில் இப்படி ஒரு கேள்வியே எழவில்லை.

தனித்தன்மை அல்லது தனது கருத்து என்று ஒன்றை முன் வைக்காமல் குரு அல்லது ரிஷிமுனிவர் வழிக்குக் கட்டுப்படுவது என்னும் மிக எளிய அணுகுமுறை தென்படுகிறது. ஆனால் சமூகம் என்பதில் குருமார்கள், தவமுனிவர்கள் என்போர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் ஒரு எளிய பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி அவளை மீளாத்துயரில் ஆழ்த்த இயலும்.

அகலிகையின் கதை ஒரு பெண்ணுக்குக் கட்டாயமாக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மட்டுமன்றி அவளை வேட்டையிடும் விதிமீறல்களையும் பதிவு செய்கிறது. அகலிகையின் மீது நிகழ்ந்த திட்டமிட்ட ஒரு தாக்குதலை அவள் எந்த மாதிரி எதிர் கொள்ள வேண்டும் என வரையறுக்க இயலாது என்பதே அகலிகையின் கதையை மூன்று ராமாயணங்களில் வெவ்வேறாய் பதிவு செய்துள்ளதில் இருந்து காணலாம்.
கம்பர்
” சரம் தரு சாபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாய
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான்” என்றார்.

இது அதிகாலையில் கௌதம முனிவர்
நீராடி சூரியனை வணங்க நதிக்குச் சென்ற வேளையில் ஆசிரமத்தில் புகுந்து அகலிகையுடன் சுகித்த இந்திரன் அவர் திரும்பி வரும் வேளையில் பூனை வடிவில் தப்ப முயல்வதைக் காட்டும் பாடல். சாபம் என்ற சொல்லுக்கு வில் என்னும் பொருளும் உண்டு.

கம்பரின் வாக்கில் சாபத்தால் இந்திரன் உடல் முழுவதும் பெண்குறி ஆகிறது. அகலிகை கல்லானாள். ராமனின் கால் பட்டு சாபவிமோசனம் பெற்றாள். அவளின் கதையைக் கேட்ட பின்பு ராம லட்சுமணன் இருவரும் விசுவாமித்திரருடன் கௌதம முனிவரின் ஆசிரமம் சென்றடைகின்றனர். விசுவாமித்திரர் கௌதமரை வேண்டி அவளை ஏற்கச் செய்கிறார்.

இதை ஒப்பிடுகையில் வால்மீகி ராமாயணத்தில் மூன்று முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன. முதல் வேறுபாடு கௌதம முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்தது பீஜங்களை. பித்ருக்களின் அருளால் அவனுக்கு சாப விமோசனம் கிடைக்கிறது. இந்திரன் உடல் முழுவதும் பெண்குறி ஆகவில்லை.

“மமரூபம் சமாஸ்தாய க்ருதவானஸி துர்மதே
அகர்தவ்யமிதம் யஸ்மாத் விபல்ஸ்வம் பவிஷ்யதி”

(பால காண்டம் 48 வது ஸர்க்கம் பாடல் 27)

இதன் பொருள் ” கெட்ட புத்திக் காரனே ! என்னுடைய வேடம் பூண்டு செய்யக்கூடாதன செய்த நீ ப ல னற்றவனாய்ப் போகக் கடவது “. “விபல்” என்னும் சாபத்திற்கு பீஜங்களை இழ என்பதே பொருள். அகலிகைக்கான சாபமும் வால்மீகி ராமாயணத்தில் வேறு படுகிறது.

கௌதமர் அகலிகைக்கு அளித்த சாபம்
” வாத பக்ஷா நிராஹாரா தப்யந்தி பஸ்மஷாயினி
அத்ருஷ்யா ஸர்பூதாநாமாஷ்ரமேஸ்மின் வஸிஷ்யஸி”
(பாடல் 30 ஸர்க்கம் 49)

இந்த சாபத்தின் பொருள் “நீ சாம்பலில் யார் கண்ணிலும் படாதவளாய் அன்ன ஆகாரமின்றிக் காற்றை உண்டு தபம் செய்வாயாக ”

மூன்றாவது வேறுபாடு கம்பராமாயணப்படி மனதிற்குள் மட்டுமே அகலிகைக்கு வந்தது இந்திரன் என்று தெரியும். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் தான் ஆனந்தமடைந்ததாகவும் அவர் வருவதற்குள் எந்தத் துன்பபுமின்றிப் போகும்படியும் கூறுகிறாள்.

கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் இந்த இரண்டிலுமே இந்த விவரங்கள் அனைத்தும் விசுவாமித்திரரால் ராமனிடம் கூறப்பட்டது. ராமசரிதமானஸிலும் அதுவே. ஆனால் அகல்யையின் பெயர் கூறாது கௌதமரது மனைவி என்று மட்டுமே வருகிறது. ( பக்கம் 141-1936 வது வருட பதிப்பு – அலஹாபாத் ராமநாராயணலால் வெளியீடு).

“கௌதமநாரி ஷாபவஷ் உபல் தேஹ்தரி தீர்
சரண்-கமல்-ரஜ் சாஹதி, க்ருபா கரஹு ரகுவீர்”

கம்பராமாயணத்தில் ராமன் அகல்யையை வணங்கி விடை பெறுகிறான். ராமசரிதமானஸில் அகல்யை கைகூப்பித்தொழுது சுருக்கமாக சாபம் பற்றிக் கூறி நன்றி தெரிவிக்கிறாள். மேலும் அவள் ஒரு சிலையாய் இருக்கிறாள். கல்லாய் அல்ல.

இவ்வாறாக, பாலகாண்டத்தில் அரசன் அல்லது அவனது குரு எடுக்கும் முடிவுகளுக்கு ஏனையர் கட்டுப்படுகின்றனர். ஆனால் இதுவே முடிவானதென யூகிக்கலாமா?

நாம் அடுத்து வாசிக்கும் அயோத்தியா காண்டம் ஒரு புதுப் பரிமாணத்தைக் காட்டுகிறது.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3

சத்யானந்தன்

அயோத்தியா காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

பால காண்டத்தை வாசித்த பின்பு ராமாயண கதா பாத்திரங்கள் இரு தண்டவாளங்கள் மீது மிக ஒழுங்காக எப்போதுமே எதிரும் புதிருமாக வாராது சீராகக் கட்டுப்படுத்தப் பட்ட ரயில் வண்டிகள் போலத் தோன்றலாம்.

பாத்திரங்கள் அனைவரும் சமூகத்தின் மிகப் பணிவான எளிய கீழ்ப்படிதலுள்ள அங்கமாக மன்னன் அல்லது குரு சுட்டும் திசையில் தனித்தன்மை ஏதுமில்லாது வழிநடப்போராய் தோன்றுகின்றனர்.

மன்னன் தசரதனோ, ராமன் மற்றும் மூன்று சகோதரரோ விதிவிலக்கானோர் அல்லர். அவரது நடவடிக்கைகள் தனித்தன்மை என்று ஒன்று தேவையில்லை தொன்று தொட்டு எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்பதாகவே படுகிறது.

ஆனால் அயோத்தியா காண்டம் பரதன் வடிவில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. இதிகாச காலத்தில் தனித்த மீறலான வித்தியாசமான சிந்தனை மற்றும் செயல்கள் பரதனால் அயோத்தியா காண்டத்தில் நிகழ்த்தப் படுகின்றன.

கம்பராமாயணத்தில் ராமன் வனம் புகுவதும் பரதன் நாடாளப் போவதுமான முடிவை கைகேயி ராமனுக்குக் கூற அவனது எதிர் வினையைக் காண்போம்.

” மன்னவன் பணி அன்றாகிலும் நும் பணி மறுப்பேனோ என
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்”

மன்னனது கட்டளையாக இல்லாமல் தங்களது கட்டளையாக இருந்தாலும் இதைத் தலைமேல் ஏற்று கானகம் புகுவேன். விடை பெறுகிறேன் எனப் பொருள் படும். (பாடல் 291)

அடுத்து
“என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும்
தன் துணைத் தாதை பாதம் அத்திசை நோக்கித் தாழ்ந்து
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய
குன்றிலும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான்”

மலையை விஞ்சும் பெருந்தோளான் ராமன் மீண்டும் கைகேயியின் பாதங்களைப் பணிந்து தந்தையின் பாதங்களை அவ்ர் இருந்த திசை நோக்கி வணங்கி விட்டு பூமி தேவி துன்பமுற கோசலை மாளிகையை அடைந்தான்.

ராமன் தனது சின்னம்மாவான கைகேயிக்குக் காட்டும் மரியாதை கூர்ந்து நோக்கப்பட வேண்டியது. ராமன் இதன் மூலம் தாய்க்குச் சமமானவராகிய கைகேயியை எதிர்க்கவோ அவருடன் விவாதிக்கவோ செய்யாது பாதங்களில் விழுந்து வணங்கி விட்டு காட்டுக்குப் புறப்படத் தயாராகிறான். அதாவது இதையே சுமித்திரை சொல்லியிருந்தாலும் ராமன் அதே போலவே நடந்திருப்பான். எனவே இதை ஒரு பாரம்பரியத்தின் நீட்சியாகவே ராமன் செய்கிறான்.

ராமனும் அவனது மூன்று சகோதரர்களும் ஒரே பின்னணியும் ஒரே குருகுலக் கல்வியும் பெற்றவர்கள். வளர்ப்பிலும் தாய்தந்தை வெவ்வேறு விதமான ஆளுமைகளாய் அவர்களை வளர்க்கவில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பாரம்பரியப்படியும் பயிற்சிப்படியும் நடப்பதில் இவர்கள் ஒரே மாதிரியானவர்கள். நடத்தை, அணுகுமுறை, சமூக நோக்கு, குடும்ப உறவினர்களிடம் பழகும் முறை அனைத்தும் இவர்களுக்கு ஒன்று போலவே சொல்லித் தரப்பட்டுள்ளது. தசரதனும் ராமனும் குருவைப் பணிந்து நடந்தது போல ராமனின் இளைய சகோதரர்களும் தாயோ சின்னம்மாவோ பெரியம்மாவோ தாள் பணிவர்.

ஆனால் அப்படி நடக்கவில்லையே ?

” காட்டுக்குப் போ ” என அப்பா சொன்னார் என்று சின்னம்மா சொன்னதும் மறுத்து ஒரு வார்த்தை பேசவில்லை ராமன். ஆனால் பரதனோ தனது சொந்தத் தாய் ‘முடி சூட்டிக் கொள்’ என்றதும் அவள் தாள் பணிந்து முடி சூடவில்லை. அத்தோடு விட்டிருந்தாற்கூடப் பரவாயில்லை. பின்வருமாறு ஏசுகிறான்.

“நோயீர் அல்லீர் நும் கணவந்தன் உயிர் உண்டீர்
பேயீரே நீர் இன்னும் இருக்கப் பெருவீரே
மாயீர் மாயா வன்பழி தந்தீர் முலை தந்தீர்
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே”

இதன் பொருள் உமது கணவன் உயிரை பறித்த நோயல்ல நீர். பேய். அவர் போய் சேர்ந்ததும் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்கிறீரே. செத்துப்போவீராக. அன்று பாலைக் கொடுத்தீர். இன்று பெரும் பழியை. இன்னும் என்னவெல்லாம் தரப் போகிறீரோ? (பாடல் 858 அயோத்தியா காண்டம்)

“ந த்வம்ஷ்வப்பதேஹே கன்யா தர்மராஜஸ்ய தீமத:
ராட்சஸி தத்ர ஜாதாஸி குல்ப்ர்த்வம்ஸினிபிது:”

அறிவாளியான அரச அஸ்வவதியின் மகளே அல்ல நீ. அவர் குலத்தில் உதித்த ராட்சஸி. அவரின் வம்சத்தை அழிக்க வந்திருக்கிறாய். ” (ஸர்க்கம் 74 பாடல் 9 வால்மீகி ராமாயணம்)

“ஜப் தே(ந்) குமதி குமத் மன் டயவு
கண்ட் கண்ட் ஹோயீ ஹ்ருதய கயவு
வர் மாங்கத் மன பயீ நஹீ (ந்) பீரா
ஜரி ந ஜீப் முஹ் பரேவு ந கீரா”

இதன் பொருள் ” கெட்டவளே ! இந்தக் கெட்ட எண்ணம் உனக்குத் தோன்றிய போது உன் நெஞ்சு ஏன் வெடிக்கவில்லை ? அந்தக் கொடிய வரத்தைக் கேட்ட போது உன் நெஞ்சில் வருத்தமே இல்லையே. உன் நாக்கு அப்போது வெந்து போயிருக்கக் கூடாது? உன் வாயெல்லாம் புழுத்துப் போயிருக்கக் கூடாது ?” (பக்கம் 416 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இந்த முரண் எவ்வாறு சாத்தியமானது ? தனிமனிதன் தனது நடத்தையையும், சிந்தனையையும், நடவடிக்கைகளையும் பரம்பரியத்தை, சமூகக் கட்டுக்கோப்பால் அங்கீகரிக்கப் பட்ட பீடங்களை ஒட்டி அமைத்துக் கொள்வான் என்றால் இரு சகோதரர்களிடையே இது எவ்வளவு பெரிய முரண் ?

ராமனே யாருடைய ஆணைகளை மறுபேச்சின்றி ஏற்றானோ அதுவும் சொந்தத் தாயான அந்தப் பெண்ணை எந்த அடிப்படையில் பரதன் ஏசினான் ?

முடி சூட மறுப்பதும் தாய் கோரிய வரங்கள் தவறானவை என்று வாதிடுவதும் புரிந்து கொள்ளக் கூடியவை. ஆனால் இந்த அளவு இழிவு செய்து தாயைத் தாக்கிப் பேசுகிறான் என்றால் தனிமனித மன எழுச்சி அல்லது உணர்ச்சிப் பெருக்குக்கு ராமாயண காலத்தில் இடம் இருந்தது என்று தானே பொருள் ? சமுதாயப் பீடங்களைத் தாண்டி ஒருவரின் செயலை எடை போடும் தனிமனித சிந்தனை வெளிப்பாடு நடக்கத்தானே செய்தது ?
தனது தூய நிலையை, சிம்மாசனத்துக்கு ஆசைப் படாத நிலைப் பாட்டை பொது மக்களிடமோ, மந்திரிகளிடமோ குருமார்களிடமோ சொன்னால் போதாதா ? தாயை இந்த அளவுக்கு ஏச வேண்டிய கட்டாயம் என்ன ?

பாரம்பரியமும், பயிற்சிகளும், சூழ்நிலையும் ஒரு தனிமனிதனை அதிக தூரம் கொண்டு சேர்ப்பதில்லை என்பதற்கு கைகேயி நல்ல உதாரணம்.

இந்தத் தோல்வி சமுதாயத்தின் அது நம்பி வருகிற பாரம்பரியத்தின் தோல்வி. அந்த ஒன்றைச் சுற்றியே தனது புரிதலைக் கட்டமைத்துக் கொண்ட பரதனுக்கு அது பேரிடி. ஏனெனில் இது அந்தப் பாரம்பரியத்தின் ஏனைய பரிமாணங்களை விழுமியங்களைக் கேள்விக் குறி ஆக்குகிறது.

இதை எப்போதுமே பரதன் எதிர் பார்த்ததில்லை. தனது தாயே தன் வலுவான விழுமியங்களைத் தாண்டிச் சென்று புதிய வடிவெடுப்பதை அவனால் பொறுக்க இயலவில்லை. அந்த ஆதங்கத்திலும் ஆத்திரத்திலும் வெளிப்படும் சொற்களே இவை.

இந்த நிலைகுலைவை அல்லது சரிவை சமன் செய்யும் விதமாக பரதன் தன்னளவில் ஒரு மீறலைச் செய்கிறான். அது தான் பாதுகா பட்டாபிஷேகம். இது சிம்மாசனத்தின், செங்கோலின் அல்லது அதிகார மைய்யத்தின் வழிபாட்டுக்குரிய தன்மையைக் கேள்விக்குறியாக்கிய செயல்.

பரதன் தன்னளவில் தனது தன்னலமற்ற நிலையைப் பிரகடனப்படுத்தும் ஒரு குறியீடாக செருப்புக்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்ட மன்னனின் அதிகார பீடத்திற்கு பரதனின் மாற்று ஏற்பாடு முன்பின் கண்டிராததே.

ராமாயணத்தில் ஒரு தனி மனிதன் தனது தனித்துவத்தை உணர்ந்து இயங்கிய ஒரு உதாரணம் பரதன். ராமனிடம் சமுதாயத்தின் அங்கமாக இயங்கி தனித்தன்மையைக் கேள்விக் குறியாக்கும் போக்கு தென்படுகிறது. பரதனும் லட்சுமணனும் எதிர்வினை ஆற்றும் போதோ அல்லது மீறல்களின் சுழலில் சிக்கி இன்னொரு மீறலை நிகழ்த்துவோராகவோ நம்முன் வருகின்றனர்.

பரதன் எப்படித் தன் தாயை ஏசினானோ சற்றும் தயங்கவே இல்லையோ அந்த மீறல் லட்சுமணனிடமும் தென்படுகிறது. முதலில் காட்டுக்கு அனுப்ப வரம் வாங்கி அதை ராமன் ஏற்றதும் கைகேயியைப் பற்றிய கடுஞ்சொற்களை உரைக்கயில். அடுத்து பரதன் ராமனை திரும்ப அயோத்தி வந்து அறியணை ஏற்க வரும்படி அழைக்க பெரும் படையும் மக்களுமாக வருகையில். அப்போது லட்சுமணன் இது ராமனை அழிக்க வரும் பரதனின் சேனை என ஐயமுறும் போது அது மிகப் பெரிய மீறலே.

இந்த மீறல்கள் ராமனுக்கு ஏற்புடையவை ஆகா; கொள்கைப் பிடிப்பு மற்றும் சமூக அடையாளமே ஆகச் சிறந்தது என்னும் ராமனின் ஆளுமையின் காரணமாய். பரதனை சந்தேகிக்கும் போது லட்சுமணனைப் பார்த்து ராமன் கூறுகிறான் :
“பொன்னொடும் பொரு கழல் பரதன் போந்தனன்
நல்நெடும் பெரும் படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்”

இதன் பொருள் : மின்னலைப் போன்ற வேலுடையவனே! பரதன் என்னுடன் போர் செய்ய வருகிறான் என்று கூறுவது உனக்குத் தகுதியுடைய சொல் தானா ? தங்கக் கழல் அணிந்த காலுக்குரிய பரதன் நால்வகைப் பெரும் படைகளையும் என்னிடத்தில் அளிப்பதற்காகவே வருகிறான். (பாடல் 1120 கம்பராமாயணம்)

“அம்பாம்ச கேகயீம் ருஷ்ய பரதஷ்சாப்ரியம் வதன்
ப்ரசாத்ய பிதரம் ஷ்ரீமான் ராஜ்யம் மே தாதுமாதக:”

இதன் பொருள் : அன்னை கைகேயின் மீது கோபங் கொண்டு அவரைக் கடிந்து கூறி பின்னர் என்னிடம் ராஜ்ஜியம் அளிப்பதற்கே திருவாளர் பரதன் வருகிறார். (ஸர்க்கம் 97 பாடல் 12 வால்மீகி ராமாயணம்)

“திமிர தருண தரணிஹிம் சக கிலயி
கரண் மகன்மகன் மகு மேகஷி மிலயி
கோபஜல் பூடஹி கட் யோனி
ஸஹஜ் ஷமா பரு சாண்டவி சோடனி
மஷக் ஃபூங்கி பரு மேரு உடாயி
ஹோயி ந நிருபமத பாதஹின் பாயி
லஷன் துமாரா ஷ்பத் பிது ஆனா
ஷூசி ஸம்பந்து நின் பரத் சமானா”

இதன் பொருள் : இரவில் சூரியன் உதிக்கலாம், ஆகாயம் மேகத்துள் ஒன்றி விடலாம், அகத்திய முனிவர் தண்ணிரில் மூழ்கி விடலாம், பூமி தனது மன்னிக்கும் குணத்தை இழக்கலாம்,கொசுவின் மூச்சில் சுமேரு மலை பறக்கலாம். ஆனால் பரதன் அரசைக் கைப்பற்றும் பேராசை கொள்ள மாட்டான். லட்சுமணா! பரதனைப் போல ஒரு கபடமற்ற சகோதரனைக் காண இயலாது.

(பக்கம் 479, 480 ராமசரித மானஸ்)

தனித்தன்மையுடைய சிந்தனை உடையவர்கள் எந்த அளவு ச்முதாயத்தின் வழி செல்வோரால் கட்டுப்படுத்தப் பட்டார்கள் என்பதே வரலாறு. ராமாயணத்தில் தனித்துவம் மிகுந்த சிந்தனை எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதையும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஒரு தனிமனிதன் இயங்கினாற் போதுமா என்பதையும் ராமாயணத்தின் தொடர்ந்த வாசிப்பில் காண்போம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4

சத்யானந்தன்

ஆரண்ய காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் நிறைய அரக்கர்கள் ராமன் அம்புகளில் மாய்ந்து போகிறார்கள். சூர்ப்பனகையின் அங்கஹீீனத்தில் தொடங்கி, கரன், தூஷணன், திரிசிரஸ், மாரீசன் மற்றும் கபந்தன். சிம்மாசனத்தில் அமராவிட்டாலும் ராமன் ரிஷி முனிவர்களை ரட்சிக்கும் பொறுப்பை நிறைவேற்றுகிறான். சூர்ப்பனகை வடிவில் சோதனை தொடங்குகிறது. ராமலட்சுமணர்களால் அங்கஹீீனப் படுத்தபட்டு அவமதிக்கப்பட்ட அவள் தனது அண்ணன் ராவணனைத் தூண்டி விட்டு சீதையைக் கடத்தும் அளவு கொண்டு வருகிறாள்.

ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகைக்கு நடப்பவை ராமனின் இயல்புக்குப் பொருந்துபவையாக இல்லை. என்றாலும் நமது கேள்வியான ‘அடையாளம் எது?” என்பதை அதிகம் நெருங்கவில்லை அந்த நடவடிக்கை. ஏனெனில் சீதையைத் தாக்கும் அளவு சூர்ப்பனகை சென்றது ஒரு காரணம் ஆகி விடுகிறது. சமுதாய நோக்கினின்று மீறியவளாய் சீதை ஆரண்ய காண்டத்தில் ஒரு வித்தியாசமான முகத்துடன் நம்மால் காணப்படுகிறாள்.

நாம் குறைந்த பட்சம் மூன்று பிரதிகளை வாசித்து ஒப்பாய்வு செய்ய நினைத்தது மிகவும் நல்லது. ஏனெனில் ஆரண்ய காண்டத்தில் கம்பராமாயணம் சீதை லட்சுமணன் மீது நிகழ்த்தும் தாக்குதலை மிகவும் நாசூக்காகக் கையாண்டிருக்கிறது.

பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது ” அட்ட திக்கினும் அப்புறம் புக” , “சீதா, ஓ லட்சுமணா ” என்று குரல் கொடுக்கிறான். இது ராமனின் குரலில்தான் மாயமாக நிகழ்த்தப்பட்டது என்று கம்பராமாயணம் திட்டவட்டமாகக் கூறவில்லை.

இலக்குவன் ராமனின் பராக்கிரமத்தைக் கூறி ஒரு அரக்கனின் கையில் சிக்கி ” சீதா, ஓ லட்சுமணா” என்று குரல் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று விளக்குகிறான். ஆனால் சீதை மனம் பதறுகிறாள். லட்சுமணன் உடன் விரைய வேண்டும் என விரும்புகிறாள். லட்சுமணனைக் கட்டாயப்படுத்த என அவன் போகாவிட்டால் தான் உயிரை விடுவேன் என்கிறாள்.
“ஒரு பகல் பழகினால் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா”

இதன் பொருள்: அன்புக்குரியவருக்காக ஒரு நாளே பழகினாலும் உயிரைத் தருவோர் உண்டு. ஆனால் உடன் பிறந்த தம்பியான நீ தமையன் உயிருக்கு ஆபத்து வந்த பின்பும் அச்சப்படாமல் இங்கேயே இருக்கிறாய்” (பாடல் 815 ஆரண்ய காண்டம்)

அதாவது உயிரை விடுவதாக மட்டுமே மிரட்டுகிறாள். ஆனால் வால்மீகி ராமாயண்த்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு லட்சுமணன் ஆளாகிறான்.

“சுதுஷ்ட்த்வம் வனே ராமமேகேஅனு கச்சஸி
மம ஹேதோ: பிரதிச்சனள் ப்ரயுக்தோ பரதேன வா ”

இதன் பொருள்: ” நீ மிகவும் கெட்டவன் ! ராமர் என்னுடன் தனியாகக் காட்டுக்கு வருவதை அறிந்து அவர் பின்னாடியே நீ வந்து விட்டாய். இல்லையென்றால் பரதன் தான் உன்னை அனுப்பி வைத்தானோ ” (பாடல் 24 சர்க்கம் 45)

“தன்ன ஸித்யதி சௌ மித்ரே தவாபி பரதஸ்யவா
கதமின் தீவதஷ்யாமம் ராமம் பத்மநிபேக்ஷணம்
உபஸம் ஷ்ருத்திய பரத்தாரம் காமயேயம் ப்ருகத் ஜனம்”

இதன் பொருள்: ” ஆனால் சுமித்திரை மைந்தனே ! உனது மற்றும் பரதனது இந்த எண்ணம் ஈடேறாது. தாமரை போன்ற நீலக் கண்களைப் பெற்ற ராமனைக் கணவனாகப் பெற்ற நான் வேறு எந்த ஆணையும் ஏறெடுத்தும் பார்ப்பது இயலாத காரியம்” (பாடல் 251/2 ஸர்க்கம் 45)

“ஸமக்ஷம் தவ சௌ மித்ரே ப்ராணாம் ஸ்த்யஷ்யாம்
ராமம் வினா ஷமப்ரதி நைவஜீவாமி பூதலே”

பொருள்:” சுமித்திரை மைந்தனே ! நான் உன் முன்னே என் உயிரை விடுவேன் ஆனால் ராமன் இல்லாமல் ஒரு கணம் கூட இவ்வுலகில் நான் வாழ மாட்டேன். ” (பாடல் 261/2 ஸர்க்கம் 45 வால்மீகி ராமாயணம்)

“ஜாஹு வேகி ஸ்ங்கட்தவப்ராதா
லக்ஷ்மம் விஹன்ஸி கஹா அனு மாகா
புகுடி விலாஸ ஸ்ருஷ்டி லயஹோயி
ஸபனேஹு ஸ்கட் பரைகி ஸோயி”

பொருள்: ” நீ உடனே செல். உனது சகோதரர் ஆபத்தில் உள்ளார். இதைக் கேட்டு நகைத்த லட்சுமணன் ‘யாருடைய புருவத்தின் அசைவில் உலகமே அழியுமோ அவர் மீது கனவிலும் ஆபத்து வராது’ என்றான். ”

” மர்ம வசன் ஸீதா ஜப் போலி
ஹரி ப்ரேரித் லட்சுமண் மதி டோலி
வன் திஷி தேவ ஸெவம்பி சப் காஹூ
சலே ஜஹான் ராவண் சஷி ராஹூ ”

பொருள்: அப்போது சீதை காதில் கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கூறவும் சீதையை திசைகள் மற்றும் வனத்தின் தேவதைகள் பொறுப்பில் ஒப்படைத்து லட்சுமணன் ராவணன் என்னும் சந்திரனை அழிக்கும் ராகுவான ராமன் இருக்கும் திசையில் சென்றான். (பக்கம் 561 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

சீதை எந்த அளவு மனக்கொதிப்போ பதட்டமோ அடைந்திருந்தாலும் லட்சுமணனைப் பார்த்து சீதை கூறிய வார்த்தைகள் இந்திய மனப்பாங்கு உள்ளோரை மிகவும் திடுக்கிடச் செய்யும். அண்ணியை அம்மாவாக நினைத்துப் பழகுவது சர்வசாதாரணமானது இந்தியப் பண்பாட்டில். வார்த்தைகள் வேண்டுமென்றால் யோசிக்காமலோ பதட்டத்திலோ உச்சரிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஐயப்பாடு அடிமனதில் இருந்திருக்கத்தானே வேண்டும்? கம்பரும் துளஸிதாஸரும் இந்த இடத்தில் நாசூக்குக் காட்டினாலும் வால்மீகி ராமாயணம் தன்னளவில் ஒரு மூலப் பிரதியாகும். எனவே அந்தப் பதிவுகளை நாம் புறந்தள்ள இயலாது. அன்றைய சமூகத்திலும் சரி இன்றும் கூட ஒரு அண்ணியின் நிலை மிகவும் மரியாதைக்கும் தொலைவுக்கும் உரியதாகவே இருக்கிறது. லட்சுமணனைப் பதம் பார்த்தது போதாது என்று சீதை பரதனை வேறு உள்ளே இழுக்கிறாள்.

இந்த நிலையில் சற்றே பின் செல்ல வேண்டும். ஆரண்ய காண்டம் என்பது அயோத்தியா காண்டத்திற்கு அடுத்த கட்டம். அயோத்தியா காண்டம் ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளில் தொடங்கி பாதுகா பட்டாபிஷேகத்தில் முடிகிறது. அப்படி பாதுகைகளைப் பெற வந்த பரதன் தன்னுடன் கைகேயியையும் அழைத்து வருகிறான். குகனிடம் தாயைக் காட்டும் போது கூட குத்தலாகத்தான் அறிமுகம் செய்து வைக்கிறான். இதன் பொருள் என்ன ? பரதனின் நிலைப் பாட்டையும் மன உறுதியையும் குற்ற உணர்வையும் பார்த்து ஒன்று கைகேயி மனம் மாறி இருக்க வேண்டும். இல்லையேல் வேறு வழியில்லை. மகனை இழப்பதை விடவும் ராஜ மாதா என்னும் நிலையை இழப்பதே மேல் என்று முடிவு செய்திருக்க வேண்டும்.

எப்படியோ பரதன் கைகேயியையே கொண்டு வந்து நிறுத்தித் தனது தூய்மையை, கொள்கைப் பிடிப்பை நிலை நாட்டி விட்டான். அதன்பின் பல அரக்கர்கள் வதம் எனக் காலமும் கடந்து விட்டது. அப்படி இருக்கையில் எவ்வாறு சீதை அன்றே பரதனைப் புரிந்து கொள்ளவில்லை? காலப் போக்கில் ராமனிடம் ஏன் இது பற்றி விவாதிக்கவில்லை ?

பரதனது படைகளைக் கண்டு கொதித்தெழும் லட்சுமணனை ராமன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் அவன் என்று கூறி அடக்குகிறான். ராமனின் கருத்து தானே சீதையின் கருத்தும் ? அப்படியே சற்று உடன்பாடு இல்லாமற் போனாலும் இவ்வளவு மோசமன கருத்தா லட்சுமணனையும் பரதனையும் பற்றி சீதையின் மனதில் இருந்தது ?

மரஉறி தரித்து வனம் புகச் செல்லும் போது மரஉறியை சீதையால் உடுத்திக் கொள்ள இயலாத போது அப்போதைக்கு சீதை அணிந்திருந்த ஆடை மீதே சுற்றி விட்டு ராமன் அவளை வனத்திற்கு அழைத்துச் செல்கிறான். கோசலையும் சுமித்திரையும் ராமனை இந்தப் பெண் இங்கேயே இருக்கட்டுமே என்று கூட வேண்டிக் கொள்கிறார்கள்.

இந்த அளவு எதிர்மறையான கருத்தைத் தன் மனதில் சுமக்கும் சீதை அப்போதே தன் மாமிகள் எதிரில் மந்திரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதையெல்லாம் கூறித் தீர்வு கண்டிருக்கலாமே?

இதே ஆரண்ய காண்டத்தில் நேர்மாறாக ராவணன் நிறையவே சிந்திக்கிறான். மாரீசன் சொல்லும் புத்திமதிகளை அப்படியே நிராகரிக்காமல் தனது முடிவை மாற்றிக் கொள்கிறான். பிறகு மறுபடியும் சூர்ப்பனகையின் துர்போதனையால் திரும்பவும் மாரீசனிடம் செல்லும் போது மாரீசன் ஒரு நீண்ட உரை நிகழ்த்தித் தடுத்துக் கூறுகிறான். அதை முழுவதுமாகக் கேட்டும் ராவணன் மனம் மாறவில்லை. எப்படி ராவணனிடம் இந்த அளவு பக்குவப்பட்ட நடவடிக்கை தென் படுகிறது? அதே சமயம் சீதை இத்தகைய ஒரு மிகவும் எதிர்மறையான மட்டமான கருத்தை தன் மைத்துனர்கள் பற்றிக் கொண்டிருக்கிறாள். அதுவும் இருவருமே வெறும் மைத்துனர்கள் மட்டுமல்லர். அவளது இளைய சகோதரிகளைக் கரம் பிடித்தவர்கள். அவ்வாறேனில் ஒரு பக்கம் கணவன் ராமன் மூலமாகவும் மறுபக்கம் தனது சகோதரிகள் மூலமாகவும் சீதையால் பரதனையும் லட்சுமணனையும் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கத் தானே செய்தது?

மாரீசன் ‘சீதே லட்சுமணா’ என்று கூறிய காட்சியை எடுத்துக் கொள்வோம். அதற்கு முன்பே ராமன் சீதையை விட்டு அகலாது காவலாயிரு என்று லட்சுமணனனுக்குக் கட்டளையிட்ட பின்பே மானின் பின் செல்கிறான். லட்சுமணன் அண்ணனின் கட்டளையை மீறுவதே இல்லை என்பது ராமாயணத்தை வாசிப்பவர்களுக்கே மிகவும் எளிமையாகப் புரியும். அவ்வாறிருக்க சீதைக்கு எப்படிப் புரியாமற் போனது?

ராமன் இட்ட கட்டளை மீறப்படவே கூடாதது என்னும் கட்டுப்பாடு ஒரு பாரம்பரியமாகவோ அல்லது அந்த மூன்று தம்பிகளின் தீர்க்கமான முடிவாகவோ இருந்து தானே வந்தது? பின் எப்படி சீதையால் லட்சுமணனை சந்தேகிக்க இயன்றது?

இந்த இடத்தில் தான் ராமாயணம் சாதாரண மனிதர்களின் காவியமாகப் பரிமளிக்கிறது. சமுதாயத்தின் நேர் கோடுகளில் கட்டங்களில் தண்டவாளங்களில் தடம் மாறாது கட்டுப்பட்டிருக்கும் – சமுதாயத்தின் அங்கமாக நிற்போரைப் பற்றியதும் அதை மீறுவோர் பற்றியதும் ஆக ஒரு முடிவற்ற கேள்வியைச் சுற்றிய தேடலில் நம்முடன் கை கோர்த்து நடக்கிறது.

கைகேயியோ சீதையோ சமுதாயத்துக்குக் கட்டுப்பட்டோர் கொண்டாடும் கோட்பாடுகள் தாங்கிப் பிடிக்கும் பீடங்களில் வீற்றிருந்தவர்கள். ஆனால் ஏதோ ஒரு நிலையில் தனது (தனி மனித) மனப் போக்கில் உணர்ச்சி வேகத்தில் மிகப்பெரிய மீறல்களைச் செய்தார்கள்.

ராமாயணத்தின் பிரதிகள் கண்டிப்பாக வேறு படுகின்றன. ஆனால் ஒரு தனிமனிதனின் இயங்குதல் தன் போக்கிலா அல்லது சமுதாயத்தின் அங்கமாகவா என்னும் கேள்வி நம் வாசிப்பில் புதிராய் நீள்கிறது. மேலும் வாசிப்போம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5

சத்யானந்தன்

கிஷ்கிந்தா காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

ஆரண்ய காண்டம் வரை மற்ற கதாபாத்திரங்கள் எப்படியோ ராமன் சமுதாய ஜீவியாக சமூகத்தின் ஒரு அங்கமாகத் தனக்கென விதிக்கப்பட்ட பணிகளைத் தனது ஷத்திரிய தர்ம நெறிகளுக்குட்பட்டே செய்து வந்தான். சூர்ப்பனகையை அங்கஹீனமாக்கியது பொருந்தவில்லை. இருப்பினும் ராமனின் வழி சமூக வழியே அன்றித் தனிமனித உந்துதலுடன் ஏன் இது என் வழியாகக் கூடாது என்னும் கேள்விக்கே இடமில்லை. இந்த நிலைப்பாட்டிலிருந்து ராமன் பிறழ்ந்தானா இல்லையா என்ற ஒரு வாதத்திற்குத் தேவையான களம் கிஷ்கிந்தா காண்டத்தில் தென்படுகிறது. அரசியல் சதுரங்கம் அறியாது ஒரு ஷத்திரியன் இயங்க இயலாது என ராமன் கிஷ்கிந்தா காண்டத்தில் மிகவும் துல்லியமான செய்தி விடுப்பதாக நாம் காண்கிறோம்.

கிஷ்கிந்தா காண்டம் ராம லட்சுமணர்களின் ஒரு எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. ராவணன் சீதையை அபகரித்தான் என்ற அளவில் தெரிந்திருந்தாலும் சீதை சிறைப்பட்டிருப்பது எங்கே என்று தெரியாமற்தான் அவர்கள் இருவரும் ஆரண்ய காண்ட முடிவில் சுக்ரீவன் பற்றிக் கேள்விப் படுகின்றனர்.

அயோத்திக்குச் செய்தி அனுப்பிப் படைகளை வரவழைக்க ராமன் விரும்பவில்லை. அதனால்தான் படைபலம் மற்றும் காட்டுவாசிகளின் ஆதரவு என்னும் நோக்கில் சுக்ரீவனைத் தேடுகிறான்.

சுக்ரீவனுக்கோ அனுமனுக்கோ ராமனின் வரலாற்றுப் பின்னணி பற்றித் தெரிந்திருக்கவில்லை. மேலும் ராமன் மற்றும் சுக்ரீவன் இருவருக்குமே தத்தமது மனைவியை மீட்டெடுக்க வேண்டியது பொதுவான கடமை ஆகிறது. இந்தச் சூழலில் தான் ஒரு அரசியல் உடன் படிக்கை போல சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.

சுக்ரீவனுக்கும் அவன் அண்ணன் வாலிக்கும் தீராப்பகை. வாலி மிகவும் வலுவானவன் (சுக்ரீவனை ஒப்பிட). சுக்ரீவனால் வாலியை வெல்ல முடியவில்லை என்பதைத் தவிர எப்போதும் உயிர் பயத்துடன் வேறு காலத்தைத் தள்ள வேண்டியிருக்கிறது. சிங்கத்தை யார் காட்டுக்கு ராஜா ஆக்கினார் என்னும் கேள்விக்கு உதாரணமான விடையாக வாழ்ந்தான் வாலி. எனவே அவன் சுக்ரீவனின் மனைவியை வலுக்கட்டாயமாகத் தன்னுடன் கொண்டு போய் வைத்துக் கொண்ட போதோ அல்லது சுக்ரீவனைத் தாக்கிய போதோ கேட்பாரில்லை. ஒரே ஒரு மலை மட்டுமே சுக்ரீவனுக்குப் புகலிடம். அங்கே வந்தால் வாலி தலை வெடித்துச் செத்து விடுவான் என்னும் முனிவர் ஒருவர் சாபத்தால் வாலி அங்கே வருவதில்லை.

ராமலட்சுமணர்களால் வாலியை அழிக்க முடியும் என்னும் நம்பிக்கை சுக்ரீவனுக்கு இல்லை. எனவே அவனுக்குப் புரியும் படி ஆச்சா மரங்களை ஒரே அம்பால் துளைத்துக் காட்டுகிறான் ராமன்.

வாலியை வதம் செய்யும் திறனுள்ளவன் ராமன் என்று தெரிந்த பிறகு வாலியை வதம் செய்யத் திட்டம் வகுக்கப் படுகிறது. அதன்படி சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைக்க வேண்டும் எனவும் அப்படிச் சண்டையிடும் போது ராமன் மறைந்திருந்து அம்பு எய்து வாலியை வதம் செய்வது என முடிவாகிறது. அவ்வாறே நடக்கவும் செய்கிறது.

ஷத்திரிய தர்மங்களையும் யுத்த தர்மங்களையும் நன்கு அறிந்தவன் ராமன். அப்பா அம்மாவைத் தாண்டி சின்னம்மா சொன்னாலே போதும் எனத் தன்னை வழி நடத்தும் நெறிமுறைகளுக்குப் புது வடிவம் கொடுத்தவன். ராமாயணம் மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களை ஒன்றாக வைத்துச் சீர் தூக்கினாலும் கதாபாத்திரங்களால் செய்யப்பட்ட மீறல்களில் மிகவும் தலையானதாக நிற்பது வாலி வதமே.

கம்பராமாயணத்தைப் பொறுத்த அளவில் வாலி மிக நீண்ட ஒரு விவாதத்தில் ராமனைக் குற்றம் சாட்டுகிறான். நாம் ராமன் தரும் பதில்களைக் காணும் போது வாலியின் கதையையே முடிப்பதற்கான வலிமையான காரணங்கள் எதுவும் தென்படவில்லை. ராமனின் ( அல்லது அயோத்தியின் ) கீழ் அந்தக் காடு வரவில்லை. ராமன் மன்னனுமில்லை. வாலிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே கண்டிப்பாக ஒரு சச்சரவு உள்ளது. ஆனால் அதில் ஒருவரைக் கொன்று அதைத் தீர்க்கும் முடிவை ஒரு அரச பதவிக்குத் தகுதி உள்ள ஒருவர் எந்தச் சூழ்நிலையில் எந்தெந்த நடவடிக்கைகளுக்குப்பின் எடுக்க வேண்டும்? சமூகமும் பாரம்பரியமும் எதிர்பார்க்கும் அணுகுமுறை எது ? ஒரு சமூகத்தின் அங்கமாக – அதுவும் தலைவனாக- இயங்கும் ஒருவன் செய்யக் கூடிய காரியம் தானா ராமன் செய்தது ?

ஏதேனும் ஒரு ஆவேசத்தில் உணர்ச்சி வசப்பட்டு அதைச் செய்தானா ராமன் ?

இல்லை. திட்டமிட்டு காத்திருந்து சரியான தருணத்தில் மறைந்திருந்து அதைச் செய்தான். எனவே மிகப் பெரிய மீறலொன்றை ராமன் நிகழ்த்தியுள்ளான். கம்பராமாயணம் வாலியின் வாதங்களை மிக அழகாகச் சித்தரிக்கிறது. ஒரு வானரம், விலங்கு என்னும் நிலையில் நின்று இதை வாலி பேசியிருக்க வாய்ப்பே இல்லை. ஆணித்தரமான வாதங்கள். தருக்கம் மற்றும் தரும நியாயம் பற்றிய அடிப்படைக் கேள்விகள்! மூன்று ராமாயணம் சொல்லுவதை முதலில் பார்ப்போம்.
“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மறுமத்து எய்தல்
தருமமோ பிறிதொன்று ஆமோ தக்கியது என்னும் பக்கம்”

பொருள்: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும் போது அவ்விரண்டு பேரையும் சமமாக நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ ? இது தக்கதன்று என்று கருதப்படும் பச்சாதாபமே ஆகும்” (பாடல் 317 கிட்கிந்தா காண்டம் கம்ப ராமாயணம்)

“நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் சீலமும் போற்றலை
வாலியை படுத்தாய் அல்லை மன்அற
வேலியைப் படுத்தாய் விறல் வீரனே”

பொருள்: “வீரனே! நூல்கள் கூறும் இயல்பான முறைகளையும் உங்கள் குலத்து முந்தையர் போல அவர்களின் வழக்கத்தையும் ஒழுக்கத்தையும் நீ ஏற்று நடக்கவில்லை. அரச அறத்தின் வேலியையே அழித்து விட்டாய்”
(பாடல் 323 கிட்கிந்தா காண்டம் கம்ப ராமாயணம்)

“கஹ ஷத்ரியக்குலே ஜாதஹ ருத்வான் நஷ்ட ஸம்ஸயஹ
தர்மலிங்கபிரதிச்சன்னஹ க்ரூரர் கர்ம ஸமாசரேத்”

“ஷத்திரிய குலப் பிறப்பும், சாஸ்திர ஞானமும் கொண்டு, காவி உடை தரித்த பின்பும் எப்படி ஒரு மனிதனால் இந்தக் கொடூரச் செயலைச் செய்ய முடிகிறது ? ”
(பாடல் 17- ஸ்ர்க்கம்-17 வால்மீகி ராமாயணம்)
“தர்ம ஹேது ஷ்ரவத்ரேஹூ குஸாயி
மாரேஹூ மோஹி(ன்) வ்யாத்கி நாயி
மை(ன்) வைரி சுக்ரீவ ப்யாரா
காரண் கவன் நாத் மோஹீ(ன்) மாரா”

“தலைவா ! தர்மத்தைக் காக்கவென அவதரித்தவர் நீங்கள். ஒரு வேடனைப் போல ஒளிந்திருந்து என்னை அம்பால் வீழ்த்தினீர்கள். சுக்ரீவனை நண்பனாகவும் என்னை விரோதியாகவும் கருதக் காரணம் என்ன? என்னைத் தாக்கியதன் காரணத்தைக் கூறுங்கள். ” (பக்கம் 611 ராமசரிதமானஸ் ராமநாராயணன் அலஹாபாத் பதிப்பு 1936)

இவ்வாறாக வாலி ராமனின் தாக்குதலை எதிர்த்து வாதிடுகிறான். இதற்கான பதில் வால்மீகி ராமாயணம் மற்றும் ராமசரிதமானஸில் தம்பியின் மனைவியை அபகரித்த முக்கியமான குற்றம் என்று வருகிறது.

“அனுஜ்-பதூ பகின் சுத்-நாரி
ஸுன் ஷட் யே கன்யா சம ஸாரி
இன்ஹே குதிருஷ்டி வ்லோகை ஜோயி
தாஹி(ன்) பதே க சு பாப் ந ஹோஹி”

பொருள்: ” முட்டாளே ! தம்பியின் மனைவியும், சகோதரியும், மருமகளும், மகளும் ஆகிய நால்வரும் சமம். இவர்களைக் கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவனைக் கொல்வதில் பாபம் எதுவும் இல்லை” (பக்கம் 616 ராமசரிதமானஸ் ராமநாராயணன் அலஹாபாத் பதிப்பு 1936)

” அஸ்ய த்வம் தர்மாணஸ்ய சுக்ரீவஸ்ய மகாத்மனஹ
ருமாயாம் வர்த்தஸே காமாத் ஸ்னுஷாயாம் பாப கர்மக்ருத்”

பொருள்: “நற்குணம் கொண்ட சுக்ரீவன் உயிரோடு இருக்கும் போதே அவனது மனைவி ருமாகாவை உன் காமத்துக்குப் பயன் படுத்திக் கொள்கிறாய். அதனால் பாவி ஆனாய்” (பாடல் 19- ஸ்ர்க்கம்-18 வால்மீகி ராமாயணம்).

இப்படியாகத்தானே ராமனால் குற்றச்சாட்டுக்கு பதிலும் தரப்பட்டு விடுகிறது. வால்மீகி ராமாயணத்திலும் ராமசரிதமானஸிலும் வாலி உடனே ராமனின் நல்ல தன்மையைப் புரிந்து கொண்டு சரணாகதி அடைந்து விடுகிறான்.

ஆனால் கம்பராமாயணத்தில் அவன் தொடர்ந்து வாதிடுகிறான். வானர இனத்திற்கு மனித இனத்தின் வரைமுறைகள் பொருந்தாது என்றும் குறிப்பிடுகிறான். கம்பராமாயணத்தில் மட்டும் முத்தாய்ப்பாக லட்சுமணன் ஒரு விளக்கம் கூறுகிறான்.

“முன்பு நின் தம்பி வந்து சரண்புக முறை இலோனைத் தென்புலத்து உய்ப்பேன் என்று செப்பினன் செருவில் நீயும் அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான்”

பொருள்: “அவன் (லட்சுமணன்) வாலியை நோக்கி ‘முன்பு உன் தம்பி தன்னிடம் அடைக்கலம் அடைந்ததால் நீதி நெறியில்லாத உன்னை வதம் செய்வதாய் ராமன் அவனுக்கு வாக்களித்தான். உன் தம்பியைப் போலவே நீயும் அடைக்கலம் என்று வண்ங்கி நிற்க வாய்ப்பு இருந்ததாலேயே அவன் மறைந்து நின்று அம்பு எய்தான்” (பாடல் 351 கிட்கிந்தா காண்டம் கம்பராமாயணம்)

தொடர் வாசிப்பில் தான் சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஏற்பட்டது ஒரு அரசியல் உடன்படிக்கையே என்பது தெளிவாகிறது. இந்த பாடலை வாசிப்போம்:

“பெறல் அருந்திருபெற்று உதிப் பெருந்
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன்
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம்
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான்”

பொருள்: ” பெறுவதற்கு அரியதான அரசு என்னும் செல்வத்தைப் பெற்ற அவன் (சுக்கிரீவன்) நான் செய்த உதவியை மறந்து விட்டான். அது தவறு. தனக்கு உதவி செய்தவருக்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்ற தர்மத்தை அவன் மறந்திருப்பது மட்டுமல்ல நமது வீரத்தையுமல்லவா மறந்து விட்டான். தனது (ராஜபோக) வாழ்வில் மயங்கிக் கிடக்கிறான்” (பாடல் 562 கிட்கிந்தா காண்டம் கம்பராமாயணம்)

ஒருவர் செய்த உதவிக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டியதை ராமன் குறிப்பிட்டுப் பேசுவது அத்தகைய ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஒப்பந்தமாக ஒரு புரிந்துணர்வுடன் கூடிய பரஸ்பர ஆதரவாகவே சுக்கிரீவனுடனான நட்பு அமைந்ததைத் தெளிவு படுத்துகிறது.

நாம் இதற்கு முன் வாசிப்பில் கவனித்தது போல் பல இடங்களில் ராமனின் முயற்சிகளும் போக்கும் தான் ஒரு அவதாரம் என்று அறிவிப்பதாகவோ நிலைநாட்டுவதாகவோ இல்லை.

சீதையை ராவணன் கடத்திச் சென்றவுடன் அவன் எங்கே சிறை வைத்திருப்பான் என்ற யூகங்கள் செய்யாமல் அவளைத் தேடவே ராமன் விரும்புகிறான். தேடவும் பிறகு தேவையானால் போர் தொடுக்கவும் கண்டிப்பாக ஆட்பலம் ராமனுக்குத் தேவை. அந்த அடிப்படையிலேயே ஒரு அரசியல் நடவடிக்கையாக சுக்ரீவனுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.

இந்த ஏற்பாடும் பரஸ்பர உதவியும் தவிர்க்க இயலாதவையே. ஒரு மன்னனுக்கான தகுதியும் மக்கள் ஆதரவும் உள்ள ராமனின் ராஜக நடவடிக்கையே. எனவே இந்த அளவு ஒரு சமூக ஜீவியாக (அதன் தலைவனாக) இயங்குவோனாகவே ராமன் இருக்கிறான்.

ஆனால் வாலியின் அட்டூழியங்களை, தவறான போக்கை, சுக்ரீவனைத் தொடரும் கொலை அபாயத்தைத் தடுக்க வாலியை வதம் செய்வது மட்டுமே ஒரே வழி என்கிற முடிவு ராமனின் பண்புகளுக்குப் பொருத்தமானதாக இல்லை. ஏனெனில் ராமன் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்காது பாரம்பரியத்தையும் சமூக விழுமியங்களையும் மதித்து நடப்பதே தலையாய கடமை என்னும் வழியிலேயே பெரும்பகுதி செல்கிறான்.

எனவே இது சுக்ரீவனால் உறுதியாக முன் வைக்கப்பட்டு வேறு வழியில்லை என்ற அடிப்படையில் ராமனால் ஏற்கப்பட்ட ஒன்றாகவே நாம் கருத வேண்டும்.

சூழ்நிலைகளை மனதிற் கொண்டு சமூகம் வகுத்த நியதிகளை ராமன் மீறிய முதல் முறையாக வாலியின் வதத்தைக் கொள்ளலாம். வாலியை வதம் செய்த முறை அதற்குப் பின் வரும் காலங்களில் ராமன் ஒரு போதும் மேற்கொள்ளாததாகும்.

மீறல்கள் சாத்தியமானவையே மற்றும் சகஜமானவையே என்னுமளவு கிஷ்கிந்தா காண்ட முடிவில் நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் தனிமனித நோக்கிலா அல்லது சமூக நோக்கிலா பாத்திரங்கள் இதில் எந்த வழியில் செல்கின்றனர் எந்த வழியை எந்த சூழ்நிலையில் எந்தக் காரணத்திற்காக மேற்கொள்கின்றனர் என்பதை மேலும் செய்யும் வாசிப்பில் ஆய்ந்து அறிவோம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன்

சுந்தர காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

வாழ்வின் இன்னல்களைப் போக்குவதற்காக பக்தியுடன் வாசிக்கப்படும் பகுதி சுந்தர காண்டம். அனுமன் லங்கையை அடைந்து சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் கணையாழியைக் கொடுத்து சூளாமணி பெற்று வருவதுடன் ராவணனுக்கு அறிவுறுத்தி அவனது படையினரால் வாலுக்குத் தீ வைக்கப்பட்டு லங்கையில் பெருந்தீ மூட்டித் திரும்பி வரும் வரையிலான கதை இது. ராவணனின் வம்சத்திலுள்ள சிலரையும் சண்டையிட்டு அழித்து விடுகிறான் அனுமன்.

நாம் வாலி வதத்தில் வியப்புக்கு ஆளானது போல சுந்தர காண்டத்திலும் அனுமனின் புரிந்து கொள்ளும் திறன் வாதிடும் திறன் ஆகியவை மனித இனத்தில் உள்ள சிறந்த சொல்லாளர்களுடன் ஒப்பிடத் தக்கவை. சொல்லின் செல்வன் என க் கம்பர் அனுமனைப் புகழ்கிறார்.

ஆரண்ய காண்டத்தில் அறிமுகமான அனுமன் ராமாயணத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வடிவெடுப்பதும், விபீடணன் என்னும் மற்றுமொரு கதாபாத்திரம் அவனது தன்மை பற்றி நாம் அறிவது சுந்தர காண்டத்தில் தான்.

சமுதாயத்தின் பாரம்பரியாமான அறநெறி தொடர்பான விழுமியங்களைப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் ஒன்றை விட்டு மற்றொன்றை ஏற்பவனாகவோ, அல்லது ஒன்றையே வித்தியாசமாக விளங்கிக் கொள்பவனாகவோ இரு பெரும் ஆளுமைகளைக் காண்கிறோம். ஒருவன் விபீடணன். மற்றொருவன் (மகாபாரதத்தில்) கர்ணன்.

விபீடணன் உடன் பிறந்த சகோதரன் நடத்தை சரியில்லை என்று அவனை விட்டு நீங்கி அவனுடைய எதிரியுடன் இணைந்து அவனை வீழ்த்த உதவி புரிகிறான். ஆனால் கர்ணனோ உடன் பிறவாத சகோதரனுடன் செஞ்சோற்றுக்கடனுக்காகத் இறுதி வரை தோளுக்குத் தோள் நின்று உயிர் நீக்கிறான்.

இருவருமே இந்தியாவின் பண்பாடு போற்றும் மிகப் பெரிய ஆளுமைகள். விபீடணன் சுந்தர காண்டத்தில் அறிமுகமாகும் போதே ராவணனிடம் தூதுவனாக வந்த அனுமனைக் கொல்வது முறையாகாது என வாதிடுகிறான். அதாவது சமுதாயத்தின் ஒரு அங்கமாக, பாரம்பரியமாக சமூகம் கடைப்பிடிக்கும் ஒரு நெறியைத் தூக்கிப்பிடித்துத் தன் சகோதரனுக்கு எடுத்துரைக்கிறான். இது என் தனி மனித விருப்பம் என முன் வைத்து அல்ல.

“பகைப்புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார்
மிகைப்புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலக் கருமத்தோரைக் கோறலின் தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிது ஒன்று உண்டோ? நம் குலம் நவை இன்றாமே?”

பொருள்: பகைவர் நாட்டை அடைந்து தன்னை அனுப்பியவரின் செய்தியைத் தெரிவித்து, கேட்பவரிடம் உண்டாகும் கோபத்தைக் குறைக்கும் படி அவர்களிடம் பேசி, ஒரு விரதமாக உண்மையையே பேசும் நேர்மையான தூதர்களை நீ கொன்றால் அது நகைப்புக்கு இடமாவது தவிர நமது குலத்துக்கே பழி உண்டாகும். (பாடல் 1158 சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்)

“அஸம்ஸயம் ஷத்ருரயம் ப்ரவிருத்தஹ
க்ருதம் ஹானேநாப்ரியம்பரமேயம்
நதூதவத்யாம் ப்ரவதந்தி ஸந்தோ
தூதஸ்ய த்ருஷ்டா யஹவோ ஹி தண்டாஹா”

பொருள்: இவன் மிகப்பெரிய எதிரி என்பதில் சந்தேகமேயில்லை. ஒப்பிடமுடியாத அளவு கடுமையான குற்றத்தை இவன் செய்திருப்பதும் உண்மையே. இருந்தாலும் சான்றோர் தூதனைக் கொல்வதற்கு ஒப்புவதில்லை. ஆனால் தூதனுக்கு வேறுவிதமான பல தண்டனைகள் உண்டு. (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 52வது சர்க்கம், 14வது பாடல்)

“வைரூய அங்கேஹூ கஷா பிகாதோ
மௌண்டயம் ததா லட்சண சன்னிபாதஹ
ஏதான் ஹி தூதே ப்ரவதந்தி தண்டான்
வதஸ்து தூதஸ்ய ந நஹ ஷ்ருதோஸ்தி”

பொருள்: ” ஏதேனும் ஒரு அங்கத்தை வெட்டுவதோ, சிதைப்பதோ, கசையடி கொடுப்பதோ, மொட்டை அடிப்பதோ, அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் பச்சை குத்தி விடுவதோ போன்ற தண்டனைகளுள் ஒன்றைக் கொடுக்கலாமே ஒழிய மரண தண்டனை தரலாம் என நான் கேள்விப்பட்டதே இல்லை” (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 52வது சர்க்கம், 15வது பாடல்)

“நாய ஷீஷ் கரி வினய பஹுதா
நீதி விரோத் ந மாரிய தூதா
ஆன் தண்ட் குச் கரிய குஸா(ந்)யீ
ஸம்ஹி கஹா மந்த்ர பல் பாயீ
சுனத் விஹ(ந்)ஸி போலா தஸ கந்தர்
அங்க் பங்க் கரி படவஹு பந்தர்”

பொருள்:விபீடணன் ராவணனை வணங்கி தூதனைக் கொல்வது அரசநீதிக்கு விரோதமானது எனக் கூறினான். வேறு ஏதேனும் தண்டனை தரலாம். இதை அவையிலுள்ள அனைவரும் ஏற்றனர். அப்போது சிரித்தபடி ராவணன் இந்தக் குரங்கை அங்க ஹீனமாக்கி அனுப்புங்கள் என்றான். (பக்கம் 664 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

தூதுவனைக் கொல்லக் கூடாது என்னும் நெறியை நினைவு படுத்தும் விபீடணன் அடுத்தவன் மனவியை அபகரிக்கக் கூடாது என்பதை சுந்தர காண்டத்தில் நினைவு படுத்தவில்லை. இது ஒரு முரணாகவே தென்படுகிறது. வருணம் என்னும் அடிப்படையில் பார்க்கும் போது ராவணனும் சகோதரரும் அந்தணரே.

தாய் வழியில் தான் அவர்கள் ராட்சசராய் அறியப்பட்டது. சரி ராட்சத நீதி என்று பார்க்கும் போது கூட எது நீதி? அவர்தம் சமூகத்தில் எது சரி எது சரியில்லை என்பது பிரதிகளில் தென்படவில்லை என்றாலும் மாரீசனின் அணுகுமுறையில் இது பேரழிவுக்கும் வம்சமே அற்றுப் போகும் நிலைக்கும் வழி வகுக்கும் என விபீடணன் விளக்கி இருக்கலாம். (யுத்த காண்டத்தில் அறிவுரை செய்கிறான் விபீடணன். ஆனால் யுத்த காண்ட நிலை வேறு. சுந்தர காண்டத்தில் அவகாசம் இருந்தது).

லட்சுமண பரதரை ஒப்பிடும் போது கும்பகர்ண விபீடணரின் சகோதர பாசம் எந்தவிதத்திலும் குறைவானதல்ல. விபீடணனைப் பொறுத்த அளவில் ராவணன் என்றைக்குமே திருந்த மாட்டான் என ஒரு ஆழ்ந்த அவநம்பிக்கை அவன் மனதிற் குடி கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது.

ஏனெனில் தூதுவனாக வந்த இவனைக் கொல்லாதே என விபீடணன் ராவணனிடம் கூறுவதற்கு முன்பு அனுமன் ராவணனிடம் ஒரு நீண்ட அறிவுரை கூறுகிறான். அதில் பிறன் மனை விழைவது குற்றம் என உறுத்துக் கூறுகிறான்.
“திறம் திறம்பிய காமச் செருக்கினால்
மறந்த தம்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்”

பொருள்: முறை தவறிய காமத்தின் செருக்கில், அறம் மறந்து மயங்கியோர் இறந்தும் மேலும் இழிந்துமே போனார்கள். அறம் பிறழ்ந்தோரில் அழியாமல் வாழ்வோர் யார் உள்ளார்கள்?

(பாடல் 1140 சுந்தர காண்டம் கம்ப ராமாயணம்)

“இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகைஉற நாண் இலன்
பச்சை மேனி புலர்ந்த பழி படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ”

பொருள்: பிறர் நகைக்கும் படி பிறன் மனைவியின் மீது காமம் கொண்டு காம தாபத்தால் உடல் வாடி நைவது ஆண்மையின் குணங்களுள் ஒன்றாகுமோ? (பாடல் 1143 சுந்தர காண்டம் கம்ப ராமாயணம்)

“தத் பவான் த்ருஷ்டதர்மார்த்ஸ்தபஹக்ருதப்பரிக்ரஹஹ
பரதாரான் மஹாப்ராஷ நோபரோத்தம் த்வம்மர்ஹஸி”

பொருள்: அறிவிற் சிறந்தவனே! நீ அறம் பொருள் என்னும் தத்துவங்களை நன்கறிந்தவாய். மிகப்பெரிய தவங்களைப் ப்ரிந்தன் நீ. எனவே இன்னொருவர் மனைவியைத் தன் வீட்டில் அடைத்து வைத்திருப்பது முறையாகாது. (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 51வது சர்க்கம், 17வது பாடல்)

ராமசரித மானஸில் ராமனைச் சரணடைவதே சிறந்தது என ராமனின் பராக்கிமரங்களைத் தூக்கிப் பிடிக்கிறான் அனுமன். குறிப்பான அறநெறி போதனை ஏதுமில்லை.

இவ்வாறாக கைலாயத்தையே தன் தவ வலிமையால் அசைத்த ராவணனனுக்கு அறிவுரை கூறுமளவு சமுதாய நெறிமுறைகளை நன்கறிந்த சமுதாய அங்கமாக அனுமன் நம்மால் காணப்படுகிறான். ஒரு மன்னனுக்கு அவனது அவையில் அவனது சகோதரன் விபீடணன் எதிரில் புத்திமதி கூறுமளவு அனுமனின் அறவுணர்வு பிரம்மாண்டமாக நம் முன் எழுகிறது.

இதைக் கேட்டும் தன் படையினரையும் உறவினரையும் அழித்துப் பின் பிரம்மாஸ்திரத்தில் கட்டுப்பட்டதால் மட்டும் அடக்கப்பட்ட அனுமனைக் கொல்ல முடிவெடுக்கும் போது தான் விபீடணன் ராவணனனைத் தடுத்துக் கூறுகிறான்.

இப்படியாக அனுமனும் விபீடணனுமாய் அறநெறிகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால் அதற்கு அடுத்து நடப்பவை மிகப் பெரிய மீறல்களாக நம்மைத் துணுக்குறச் செய்கின்றன. அனுமனைக் கொல்லா விட்டாலும் அளவில் மிகப் பெரிய அவனுடைய வாலுக்குத் தீ வைக்க ராவணன் ஆணையிட பிரம்மாஸ்திரக் கட்டு எடுக்கப்பட்டு வாலுக்குத் தீ மூட்டப்படுகிறது. சூர்ப்பனகையை அங்கஹீனம் செய்ததற்குப் பதில் அடியாக ஒருபுறமும் மறுபுறம் லட்சுமணனின் அந்தச் செயலைப் போலவே இதுவும் கேள்விக்குறியதாகிறது. அனுமனால் அப்பெருந்தீ லங்கை முழுவதும் பரவுகிறது.

நந்தவனங்கள், பறவைகள், விலங்குகள், வீடுகள், போர் வீரர்கள், அவரது மனைவி குழந்தைகள், பொது மக்கள் எனத் தீயில் வெந்து சாம்பலானோர் பட்டியல் மிகப் பெரிது. ஒரு அரசனுக்கே அறநெறி சார்ந்த அறிவுரை கூறிய அனுமனின் செயல் இது. அனுமனின் இந்த அழிவுத் தாண்டவம் தற்செயலாய் நிகழ்ந்ததா? இல்லை. இறுதியில் அனுமன் தானாகவே கடலிற் சென்று அத்தீயை அணைக்கிறான். அவ்வாறெனில் இப்பேரழிவை நிகழ்த்த அனுமனைத் தூண்டியது எது? ராமன் மற்றும் சீதையின்பாற் கொண்ட விசுவாசம் ஒன்றே இதன் காரணம் என்றால் ஒரு தவறான அரசனின் காரண்மாக அவனது குடிமக்கள் அழிய வேண்டும் என நியாயப் படுத்த இயலுமா? இதை எப்படி விளங்கிக் கொள்வது? எத்தகைய புரிதலுடன் சுந்தர காண்டத்தை நாம் வாசிப்பது என்னும் கேள்வி நம் முன்னே எழுகிறது. ஒரு ஆவேசத்தில் இயங்கிய அனுமன் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை என எண்ண முடியாதபடி, பின் வரும் பாடல்களைக் காண்கிறோம்:

“விட்டு உயர் விஞ்சையர் வெந்தீ
வட்ட முலைத் திருவைகும்
புள் திரள் சோலை புறத்தும்
கட்டிலது என்பது சொன்னார்”
பொருள்: வானத்துக்கு பூமியிலிருந்து வந்த வித்யாதரர்கள் பெரிய தீயானது வட்டமான முலை உடைய சீதை இருக்கின்ற பறவைகள் நிறைந்த சோலையை வெளியிலோ உள்ளேயோ சுடவில்லை என்பதைக் கூறினார்கள்.

“வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்
செந்திரல் வீரன் வியந்தான்
உய்ந்தெனன் என்ன உயர்ந்தான்
பைந்தொடி தாள்கள் பணிந்தான்”
பொருள்: வந்தவர்களான வித்யாதரர்கள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தான் அனுமன். வியந்தான். ‘நான் தீவினையில் இருந்து தப்பினேன் என்று எண்ணி மேலெழும்பிச் சென்று சீதையின் கால்களில் (அசோகவனத்தில்) பணிந்தான்.

(பாடல் 1244,1245 சுந்தர காண்டம் கம்ப ராமாயணம்)

“யதி தக்தா திவ்யம் ஸ்ர்வா நூன மார்யாமி ஜானகி
தக்தா தேன மயா பர்துர்ஹதம் கார்யமஜானதா”

பொருள்: இலங்கையே எரிந்து அழிந்ததென்றால் மதிப்பிற்குரிய ஜானகியும் எரிந்து வெந்திருப்பார். இப்படிச் செய்து என்னையுமறியாமல் என் இறைவனின் பணியை ஒன்றுமற்றதாக்கி விட்டேன். (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 55வது சர்க்கம், 8வது பாடல்)

” ததஹ கபிஹி ப்ராப்தமனோரதார்த்
ஸ்தமஷ்ரதாம் ராஜஸுதாம் விதித்வா
ப்ரத்யஷதஸ்தாம் புனரேவ த்ருஷ்டா
ப்ரதிப்ராணாய மதிம் சகார்”
பொருள்: இளவரசி சீதைக்கு எந்த ஊறும் விளையவில்லை என்றறிந்து, தனது எண்ணம் ஈடேறியது என நினைத்து மறுபடி சீதையை தரிசிக்க விழைந்தான் அனுமன் (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம், 55வது சர்க்கம், 65வது பாடல்)

“ஜாரா நகர் நிமிஷ இக் மாஹி(ன்)
ஏக் விபீஷண் கோக்ருஹ் நாஹி(ன்)
பொருள்: ஒரே நிமிடத்தில் நகர் முழுவதும் எரியத் துவங்கியது. விபீடணனது வீடு மட்டும் எரியவில்லை. (பக்கம் 666 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

ராமசரிதமானஸில் சீதை எரிவாளா என்னும் அனுமன் கவலை பற்றிய எந்தப் பதிவும் இல்லை. மற்ற இரு ராமாயணங்களிலும் அனுமன் பாரபட்சமாகச் சிந்திக்கிறான். அதாவது சீதை தான் மூட்டிய தீயால் பாதிக்கப் படவில்லையா என அனுமன் கவலைப் படுவதும், பின் தெளிந்து மன ஆறுதல் அடைவதும் சீதையின் மீது அவனுக்கு உள்ள அக்கறையை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மற்ற உயிர்களை மிகவும் மலிவாக நினைப்பதும் அதில் தொக்கி நிற்கவே செய்கிறது.

சமுதாயம் பற்றிய உணர்வே பொது நலன் பற்றிய அக்கறையே அற உணர்வுகளின் அடிப்படை. எனவே தன்னை (பொறுப்புள்ள) சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி அறநெறி பேசும் அதே கதா பாத்திரம் மறுகணம் ஊழித்தாண்டவம் ஆடுவதையும் காண்கிறோம் சுந்தர காண்டத்தில்.

சீதையோ, பரதனோ, அனுமனோ கொண்ட மீறல்களில் ஒரு பொதுமையானது அவர்களை அடக்கி ஆளும் ராமன் அருகே இல்லை. சரி, ராமனே வாலிவதையில் செய்த மீறல்?

மேலும் வாசிக்கும் போது தனிமனித உணர்வுகள் எப்போது மேலெழும்புகின்றன, மற்றும் தன்னை சமூகத்தின் அங்கமாக எப்போது பாத்திரங்கள் உணர்கின்றனர் என்பது பிடிபடலாம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7

சத்யானந்தன்

யுத்த காண்டம் – முதல் பகுதி

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

சுந்தர காண்டத்திற்கு முன்னர் நாம் சூர்ப்பனகை மற்றும் மாரீசன் பேசுவதை மட்டுமே காண்கிறோம். சுந்தர காண்டத்தில் தான் முதன் முதலாக விபீடணன் ‘தூதுவனைக் கொல்லாதே’ என்னும் போது கவனிக்கிறோம். சுந்தர காண்ட முடிவில் லங்கையை எரித்து விட்டு அனுமன் கிஷ்கிந்தைக்குத் திரும்புகிறான்.

இங்கே லங்கையில் விபிடணன் ராவணனுக்குப் புத்திமதி கூறுகிறான்.

“இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீட்கொள கிளையோடும் மடியாது
அசைவில் கற்பில் அவ்வணங்கை விட்டருளிதி இதன் மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரில் மிக்கான்”

பொருள்: அறிஞருள் முதன்மையானவனான விபீடணன் “மாறாத கற்புடையவளான சீதையை அனுப்பி விடுவதே நம் குலத்தின் உயர்ந்த பண்பு தாழ்ந்து விடாமலும் , சுற்றத்துடன் நீ இறந்து போகாமலும் காக்கும்” என்றான்.
(பாடல் 110 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

ந து ஷமம் வீர்யவதா தேன தர்மானுவர்திதனா
வைரம் நிரர்த்தகம் கர்த்தும் தீயதாயஸ்ய மைதிலி

ஸ்ரீராமன் தர்மாத்மா ஆனவர். மிகுந்த ஆற்றல் கொண்டவர். அவரிடம் வீண் போர் புரிதல் உகந்ததன்று. மிதிலை மன்னரின் மகளான ஜானகியை அவரிடம் திரும்ப அனுப்ப வேண்டும்.
(பாடல் 16 ஸர்க்கம் 9 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

இந்த அறிவுரையைப் பொருத்த அளவில் ராம சரித மானஸ் சற்றே வேறுபடுகிறது. விபீடணனின் புத்திமதி மற்றும் அதைத் தொடர்ந்து அவன் ரானிடம் சரணடைவது இரண்டுமே சுந்தர காண்டத்திலேயே நிகழ்ந்து விடுகின்றன.

“ஜோ ஆபன் சாஹெவ் கல்யாணா
சுயஷ் சுமதி ஷுபதி சுக் நானா
தெவ் பரநாரி குஸாயி
தஜெவ் செவ்தீ சந்தா கீ நாயி(ந்)”

பொருள்: “நீங்கள் தமது நன்மை, புகழ், நன்மதி, நற்கதி மற்றும் பல சுகங்களை அடையும் எண்ணம் கொண்டிருந்தால் பிறன்மனைவியை சதுர்த்தசி நிலவை விட்டு நீங்குவது போல் (அமாவாசையன்று) நீங்கி விடுங்கள்.
(பக்கம் 676 சுந்தர காண்டம் ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் 1936 பதிப்பு)

எனவே, விபீடணனது அறிவுரை ஒரு உடன்பிறப்பின் தரப்பில் அக்கறையும் கவலையும் கொண்டதாக இல்லாமல் லங்கை அரசின் முக்கியப் பங்குள்ள இளவரசன் என்னும் தொனியுடனும் தோரணையுடனும் இருப்பதைக் காண்கிறோம்.

விபீடணனும் கும்பகர்ணனும் ராவணின் இரு சகோதரர்கள். சமுதாயம் சகோதரனின் கடமை இது தான் எனக் காட்டிய வழியில் க ண் ணை மூடிக் கொண்டு கும்பகர்ணன் செல்லுவதை நாம் இதே யுத்த காண்டத்தில் காண்கிறோம். எனவே விபீடணனது அறிவுரை தனது இறுதியான அரசியல் முடிவைச் செயற் படுத்தும் முன் (எதிரியான ராமனிடம் சரணடையும் முன்) ராவணனுக்கு ஒரு வாய்ப்புத் தர எண்ணி செய்யப்பட்டதே.

இந்த முடிவை மொத்த லங்கை மற்றும் அரக்கர் ஆட்சியின் தொடர்ச்சி இவற்றை மனதிற் கொண்டே விபீடணன் எடுக்கிறான். சீதை கடத்தப் படும் முன்பும் ராமன் அதே வீரதீரமிக்க மன்னர் குலத்தவனே.

தாடகை முதல் மாரீசன் வரை எத்தனையோ அரக்கர் ராமனின் பாணங்களுக்கு இரையாயினர். அப்போதெல்லாம் ராமனின் புகழை விபீடணன் உரைக்கவில்லை. நாம் ராமனின் வழி நடப்போம் சரணடைவோம் என்று கூறவேயில்லை. சீதையை சிறை வைத்துப் பல நாட்களுக்கும் அவன் மௌனமே காக்கிறான். அனுமன் கொல்லப்பட வாய்ப்பு இருக்கும் சற்று முன்னர் (சுந்தர காண்டத்தில்) அவன் தூதுவனைக் கொல்ல வேண்டாம் என்னும் கோணத்தில் அறிவுறுத்துகிறான். அனுமன் சொன்னவற்றைத் திருப்பிச் சொல்லவில்லை விபீடணன். சீதை அபகரிப்பு மிகப் பெரிய குற்றம் என்று சுந்தர காண்டத்தில் பேசவேயில்லை. இவ்வளவு ஏன்? யுத்த காண்ட துவக்கத்தில் கூட ராமனின் பேராற்றல் குறித்துப் பேசும் அளவு விபீடணன் அபகரிப்புக் குற்றம் என்னும் அடிப்படையில் பேசவேயில்லை. நீ ஏன் ராமனின் மனைவியை அபகரித்தாய்? அல்லல்படுவாய் என்னும் கோணத்திலேயே அவனது புத்திமதிகள் அமைகின்றன.

தனது அறிவுரையும் தானும் ராவணனால் நிராகரிக்கப் படுவோம் என விபீடணன் நன்கறிவான். எனவே அரசியல் ரீதியான ஒரு முடிவே ராமனிடம் சரண்புகல் என்னும் அணுகுமுறைக்குப் பின்வரும் பாடல்கள் சான்றாய் அமைகின்றன

விபீடணன் முகாமுக்கு வெளியே ராமனை சந்திக்க என வந்து காத்திருக்கிறான் என்ற செய்தி தெரிந்த உடன் அவனை ஏற்பதா வேண்டாமா என சுக்ரீவனை ராமன் கேட்க அவன் கூறுவான்:

“தகையுறு தம்முனை தாயை தந்தையை
மிகையுறு குரவரை உலகின் வேந்தனை
பகைஉற வருதலும் துறந்த பின்பு இது
நகையுறல் அன்றியும் நயக்கற்பாலதோ

பொருள்: மூத்தவனாகிய அண்ணனை, வணக்கத்துகுரிய ஆசிரியரை, உலகத்துக்குத் தலைவனான அரசனையும் பகைவன் தாக்க வந்ததும் கை விட்டு விடும் பண்பு ஏளனத்துக்கு உரியதே அன்றி ஏற்கக்கூடியதா?
(பாடல் 365 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

ஜாம்பவான் சொல்வது:
வெற்றியும் தருகுவர் வினையம் வேண்டுவர்
முற்றுவர் உறுகுறை முடிப்பர் முன்பினால்
உற்றுறு நெடும் பகை உடையவர் அல்லதூம்
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ

பொருள்: நெடும் பகை உள்ளவர்கள் முதலில் பணிந்தும் நம் வெற்றிக்கு உதவியும் செய்து, வேறு நமது குறைகளை நம்மோடு சேர்ந்து நீக்குவார்கள். ஆனால் தக்க தருணத்தில் நமக்குத் தீங்கே இழைப்பார்கள். மேலும் கீழினமான அ ர க்கருடன் சேருவதில் என்ன சிறப்பு? (பாடல் 376 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அனுமன் கூறுகிறான்:
வாலி விண் பெற அரசு இளையவன் பெற
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்

பொருள்: வானுலகை வாலியும் அவன் தம்பி சுக்ரீவன் அரசையும் அடையச் செய்த உமது வில்லின் வலிமையையும் தங்கள் ஆளும் திறத்தையும் குணத்தையும் புரிந்து கொண்டு உங்களிடம் சேர்ந்து அரசை அடைய விரும்பி விபீடணன் வந்துள்ளான். (பாடல் 394 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில் சுக்ரீவன் கூறுவது:

“ப்ரக்ருத்யா ராக்ஷஸோ ஹ்யேய ப்ராதா மித்ரஸ்ய வை ப்ரபோ
ஆகதஷ்ச ரிபுஹு ஸாக்ஷாத் கதஸ்மின்ஸ்ச்சவிஷ்வஸேத்”

பொருள்: பிரபு, இவனோ இயல்பால் ராக்ஷஸன். தன்னை நம் எதிரியின் உடன் பிறந்தவன் என்றும் சொல்லிக் கொள்கிறான். அவ்வாறெனில் நம் எதிரியே இங்கு வந்தானென்றே கொள்ள வேண்டும். (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 7வது ஸர்க்கம் 15வது பாடல்)

அனுமன் கூறுவது:

உத்யோகம் தவ ஸ்ம்ப்ரேக்ஷ்ய மித்வாவிருத்தம் ச ராவணம்
வாலினம் ச ஹதம் ஷ்ருத்வா ஸுக்ரீவம் சாபிஷேசிதம்
ராஜ்யம் ப்ரார்த்தயமானஸ்து புத்திபூர்வமிஹாகதஹ
ஏதாவத் து பரஸ்க்ருத்ய யுஜ்யதே தஸ்ய ஸ்ங்க்ரஹ

பொருள்: தங்களது செயற் திறன், ராவணனது கெட்ட நடத்தை, வாலியைத் தாங்கள் வதம் செய்ததையும், சுக்கிரீவன் ராஜ்ஜியம் பெற்றதையும் அறிந்த பிறகே இவன் தங்களைச் சரணடைய வந்துள்ளான். (தாங்கள் பாதுகாப்புத் தந்து அரசும் தருவீர்கள் என்று அவன் நம்புகிறான்). இதைக் கருத்திற் கொண்டால் அவனை ஏற்றுக் கொள்வது உகந்தது என்றே தோன்றுகிறது.(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 7வது ஸர்க்கம் பாடல்கள் 66,67)

ராமசரித மானஸில்
பேத் ஹமார் லேன ஷட் ஆவா
ராகிய பாந்தி மோஹி(ந்) அஸ் பாவா
சகா நீதி தும் நீக் விசாரி
மம ப்ரண ஸரணாகத் பய ஹாரி

பொருள்: (சுக்கிரீவன் கூறினான்: நம்முள் பிளவு உண்டாக்கும் சதியுடன் இவன் வந்துள்ளான். இவனைப் பிடித்து சிறையிலடைக்க வேண்டும். இதைக் கேட்டு ராமர் கூறினார் ” ஒரு வேளை நீ கூறியது சரியாக இருக்கலாம். ஆனால் என்ன செய்வது ? சரணமடைந்தவரைக்காப்பது என் உயிர் மூச்சு போன்றது”

சுனி ப்ரபு வசன் ஹரஷி ஹனுமானா
ஷரணாகத வத்சல பகவானா

பொருள்: இதைக் கேட்ட ஹனுமன் மகிழ்ந்தான். ‘சரணமடைந்தவர் மீது அன்பு செலுத்துபவர் தாங்கள் இறைவனே!”
(பக்கம் 680 சுந்தர காண்டம் ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் 1936 பதிப்பு)

சமுதாயத்தால் பாரம்பரியமாக, மிகவும் கடைப்பிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வரும் அற நெறி
களை மீறித் தனி மனித உத்வேகத்துடன் செயற்படும் நிகழ்வுகளை ஒவ்வொரு காண்டமாக வாசித்து வருகிறோம். ஒரே கதாபாத்திரம் சமூக அங்கமாக அனேக தருணங்களிலும், அபூர்வமாக மிகப் பெரிய ஒரு மீறலைச் செய்பவராகவும் நம்முன் வருகின்றனர். அத்தகைய மீறல் தருணங்களில் ‘ என்னுடைய புரிதலுக்கு மட்டுமே தென்பட்ட முக்கியமான விஷயம்; மிக நல்ல செயற்பாடு இது’ என்னும் கோணத்தில் தான் எல்லா கதாபாத்திரங்களும் இயங்கியுள்ளார்கள். தனது தனித்தன்மையை நிலை நாட்டும் தேவை இருப்பதாக மிகப்பெரிய ஆளுமைகள்கூட ராமாயணத்தில் தலை எடுத்து முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால் தானோ, குடும்பமோ, நாடோ, ஆட்சியோ ஏதோ ஒன்று மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதைத் தனது கோணத்தில் மட்டுமே காண்பதாக உணரும் ஒரு மையப்புள்ளி இந்த மீறல்கள் அனைத்திலும் தென் படுகிறது.

ஆகவே நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ தன்னுள்ளிருந்து பெற்ற ஒரு உந்துதலில் தனிமனிதராய், தம் போக்கில் பாத்திரங்கள் செயற்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக யுத்த காண்டம் நம் கேள்விக்கான விடையை நம்மை நெருங்க வைக்கும் சாத்தியங்களைக் காட்டுகிறது. யுத்த காண்டம் பெரியது. மேலும் வாசித்து வழி தேடுவோம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8

யுத்த காண்டம் – இரண்டாம் பகுதி

போர் ஒரு திருப்புமுனையே. தீர்வு அல்ல. போர் ஒரு சமூகமோ, அரசனோ தவிர்த்து வந்த ஒரு மாற்றத்தை வன்முறையாக நிகழ்த்திக் காட்டுகிறது. எல்லாப் போரின் முடிவிலும் ஒரு தொலை நோக்கற்ற தலைவனின் முடிவு நிகழ்த்தப்படுகிறது.

போர் பல காவியங்களின், பல இலக்கியப் படைப்புகளின் களனாகியுள்ளது. மன்னனின் புகழ் பாடியோர் அவன் போரில் கொன்று குவித்த காதையை அவன் வீழ்த்திய அரசுகளின் வரிசையைச் சொல்லியே பாடினர். போரின் தாக்கமும் அது நிகழ்த்தும் மாற்றமும் ஒரு வரலாறின் இன்றியமையாத பகுதியாகப் போரை உயர்த்தின.

ஆனால் போர்கள் இருமுனை மன்னர்களுக்கு எப்போதுமே மிகப் பெரிய சவாலாக இருந்தன. ஏனெனில் போரின் முடிவு அவர்களது அதிகார பீடத்தின் அல்லது அரசியல் வாழ்க்கையின் முடிவாக இருக்கக் கூடும். இதனால் போருக்காகத் திட்டமிடல் மற்றும் தயாராவதில் ஒரு முக்கியமான பகுதியாகப் போரைத் தவிர்த்து தூதுவர் மூலமாகப் பேசிப் பிரச்சனையைத் தீர்க்க முயலுதல் இருந்தது.

வெற்றி பற்றிய நிச்சயம் இருந்த மன்னன் கூடத் தூது அனுப்பும் வாய்ப்பை நழுவ விடுவதில்லை. ஏனெனில் அழிவு, உயிர்ச்சேதம் என்பது வெல்லும் மன்னனின் நாட்டுக்கும் படைக்கும் உண்டு. எனவே தூது அனுப்பும் வழிமுறை மிக அவசியமான பாரம்பரியம் ஆகிறது. ராமனும் அந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறான். ராவணனிடம் பேச அங்கதனைத் தூது அனுப்புகிறான்.

“தூதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும் ஆகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலையம் அன்னான்”

“கருணையின் உறைவிடமான ராமன் ‘நாம் ஒரு தூதுவனை அனுப்பி சீதையை விடிவிக்கும்படி ராவணனை வேண்டிவோம். அவன் மறுத்தால் போரிடச்செல்வோம். அறமும் நீதியும் அதுவே ஆகும்” (பாடல் 916 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

தூதோ அஹம் கோசலேந்திரஸ்ய ராமஸ்யாகிஷ்டக்மணஹ
வாலிபுத்ரோ அங்கதோ நாமயதி தே ஷோத்ரமாகதஹ
ஆஹத்வாம் ராகவோ ராமஹ கௌஸல்யானந்தன தவர்த்தனஹ
நிஷ்பத்ய ப்ரதியுத்வஸ்ய ந்ருஷம் புருஷோபவஹ
ஹந்தாஸ்மி த்வாம் ஸஹாமாத்யம் சபுத்ரஞாந்திபாந்தவம்
நிருத்திக்னாஸ்த்ரயோ லோகோ பவிஷ்யந்தி இதே த்வயி

பொருள்:” மிக எளிதாக பெரும் சாதனைகள் செய்யும் கோசலை மன்னன் ராமனின் தூதனும் வாலியின் மகனுமான அங்கதனுமாவேன். என் பெயரை நீ கேள்விப்பட்டிருக்கலாம்.”

அன்னை கோசலையின் மகிழ்ச்சியை அதிகமாக்கும் ரகுகுலதிலகமான ஸ்ரீராமர் உனக்கு சொல்லும் செய்தி ஆவது “பேடியான ராவணனே ! சற்றேனும் ஆண்மையுடன் வீட்டை விட்டு வெளியே வந்து போரில் என்னை எதிர் கொள்.

உனது மந்திரி, மகன்கள், மற்றும் உறவினருடன் சேர்த்து உன்னையும் வதம் செய்வேன். ஏனெனில் உன்னை அழித்தால் முவ்வுலக உயிரும் பயமின்றி வாழ்வர்” (வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் ஸ
ர்க்கம் 41 பாடல் 78, 79, 80)

கஹ கபி தர்ம ஷீலதா தோரி
ஹமஹு(ன்) சுனிக்ருத் பாதிய சோரி
தேகேவு நயன் தூத் ரக் வாரி
பூடி ந மரேஹு தர்மப்ரத்தாரி

பொருள்: “அங்கதன் சொன்னான் “அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் உன் தர்ம சிந்தனை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தூதுவனை நீ காப்பதைக் கண்ணாலேயே காண்கிறேன். இதை தர்மபாலனம் என்னும் நீ முழுகினாலும் இறந்து போகாதவன்” (பக்கம் 714 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இப்படி தூது அனுப்பும் ராமன் வாலியை வதம் செய்த போது எந்த அணுகுமுறையை மேற்கொண்டான்? சமுதாயத்தின் தேர்ந்தெடுத்த எந்த விழுமியங்கள் அவனுக்கு வழி காட்டின? வாலி வதத்தைத் தவிர்க்க இயலாது என்னும் கருத்து மட்டுமே தென்படுகிறது. வேறு எந்த மாற்றும் இல்லை என்னும் கருத்தும்.

சீதையைப் பிரிந்து மனம் துயர் அடையும் நேரத்தை விட்டு விட்டால் ராமன் ஒரு அரசனின் அரசியல் ரீதியான கண்ணோட்டத்தோடுதான் செயற்படுகிறான். ரிஷிமுனிவர்களை ரட்சிக்கிறான். தனது எதிரியை இனங்கண்ட பின்னர் படைகளைத் திரட்டுகிறான். சரணம் என்று வந்த பகைவனின் தம்பியை ஏற்கிறான். இறுதிப் போருக்கு முன்னர் மறுபடி ஒரு தூதுவனை அனுப்புகிறான். ஒரு அரசனாக இயங்குவதில் பிறழாது செயற்படுகிறான். ஒரு அரசன் என்பவன் கடவுளுக்கு அடுத்தபடியாக சமுதாயத்தால் நாட்டு மக்களால் போற்றப்படுபவன். எனவே அந்த பீடத்தின் கட்டாயங்களைத் தாண்டிய ஒரு கவனம் தேவையில்லை. அந்தப் பதவியின் கூரான விளிம்புகளுக்கு உள்ளேயே அவன் இயங்க வேண்டும்.

எனவே, ஒரு மன்னனோ அல்லது இளவரசனோ தனது பாதையை சமுதாயத்தின் அங்கமாக என்று நூற் பிடித்த மாதிரி ஒரு வழியில் செல்ல இயலாது. சூழ்நிலைக்கும் தனது பார்வைக்கும் ஏற்ப அவன் செய்யும் முடிவுகள் ஒவ்வொரு விதமாக இருக்கக் கூடும்.

அப்படிப்பட்ட புரிதலுக்குள்ளும் விபீடணனும் கும்பகர்ணனும் எடுக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகள் அடங்கவில்லை. விபீடணன் கும்பகர்ணன் இருவருமே ராவணனுக்கு அறிவுறு த்துகிறார்கள். ஆனால் விபீடணன் ராவணனை விட்டு நீங்கும் முன்பாக எதிரியுடன் சரணடையும் முன்பாக ஒரு இறுதி எச்சரிக்கை மாதிரியாகத்தான் அறிவுரை கூறுகிறான். கும்பகர்ணனிடம் ராவணனின் மனமாற்றத்தை விரும்பும் அதே சமயம் உடன் நின்று போராடி உயிரையும் கொடுக்கும் உறுதி தென்படுகிறது.

முதலில் விபீடணன் சொற்கள்:
“எத்துணை வகையினும் உறுதியெய்தின
ஒத்தன உணர்த்தினேன் உணர்கிற்றிலை
அத்த என் பிழை பொறுத்தருளுவாய் என
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.”

பொருள்: “நல்லனவும் உறுதிமிக்க வழியானதாகவும் உள்ளவற்றைப் பலவிதமாக உனக்கு எடுத்துரைத்தேன். ஆனால் நீ உணரவில்லை என் பிழையைப் பொறுத்து அருள்வாயாக” என உத்தமனான விபீடணன் லங்கையை விட்டு வெளியேறிப் போனான். (பாடல் 317 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்
மட்டவிழ் மலர் குழலினாளை இனி மன்னா
விட்டிடுது மேல் எளியம் ஆதும் அவர் வெல்ல
பட்டிடுது மேல் அதுவும் நன்று பழி அன்றால்

பொருள்: ” மன்னவனே ! சான்றோரின் செயலை நீ செய்யவில்லை. குலத்திற்கே இழுக்கு ஏற்படும் செயலைச் செய்தாய். கூந்தலில் தேன் சிந்த மலர்ந்து பூக்களை அணிந்த சீதையை விட்டு விடுவது மேலானது. ஆனாலும் நாம் எளியவரென்று இழிவாக கருதப்படுவோம். அவர்கள் நம்மை கொன்று போரில் வெல்லக் கூடும். அது சிறந்தது. ஏனெனில் பழி இன்றி இறப்போம் நாம்.”

வால்மீகி ராமாயணத்தில் விபீடணன் சொற்கள்:
தன்மர்ஷயது யன்சோக்தம் குருத்வாத்திதமித்ததா
ஆத்மான் சர்வதா ரக்ஷ புரீம் சேமாம் ஸராக்ஷஸாம்
ஸ்வஸ்தி தேஅஸ்து கமிஷ்யாமி சுகீ பவமயாவினா

பொருள்: “ராட்சஸரின் அரசனே ! நான் உன் நலம் விரும்புகிறேன். எனவே நான் கூறியவை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என் அண்ணன் என்னும் முறையில் என்னை மன்னித்து விடு. இனி நீயும் ராட்சஸருமாய் முழு லங்கையைக் காப்பீராக. உனக்கு நல்லது நடக்கட்டும். நான் இங்கிருந்து கிளம்பி விடுகிறேன். நீ நான் இல்லாமல் சுகமாயிருப்பாயாக.

நிவார்யமாணஸ்ய மயாஹிதைஷிணா
ந ரோசதே தே வசனம் நிஷாசர
பராந்தகாலேஹி கதாயுபோ நரா
ஹிதம்ந க்ருஹம்தி ஸுகப்திரீரிதம்

பொருள்: தவறான நடத்தையுள்ள மன்னா! நான் உனது நலம் விரும்பி. எனவே நான் பல முறைகள் உன்னை கெட்ட வழியில் இருந்து செல்லாமல் நிறுத்த முயற்சித்தேன். ஆனால் என் பேச்சு உனக்குக் கசப்பாயிருக்கிறது. ஆயுள் முடியும் நிலை வந்தோர் அன்புக்குறியவரின் பேச்சைக் கேட்க மாட்டார்கள்” (ஸர்க்கம் 16 பாடல் 15,16 வால்மீகி ராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில் கும்பகர்ணன் பேச்சு:
யதுகதமிஹ தே பூர்வே பிரியயா மேஅனுஜேனச

பொருள்: உனது அன்பு மனைவி மண்டோதரி மற்றும் என் அன்புத் தம்பி விபீடணன் உன்னிடம் என்ன சொன்னார்களோ அதுவே நமக்கு நன்மை தரக் கூடியது. உன் மனம் எவ்வழி விரும்பிகிறதோ அவ்வழி செல்” (ஸர்க்கம் 63 பாடல் 11 வால்மீகி ராமாயணம்)

அவஷ்யம் து ஹிதம் வாச்யம் ஸ்ர்வாவஸ்தம் மயா
பந்து பாயாதபிஹிதம் ப்ராதுஷ்னேகாஷ்ச்ச பார்த்திவ
ஸத்ருஷம் யச்ச காலே அஸ்மின் கர்த்தும் ஸ்னேஹேகா
வித்ருணாம் கதனம் பஷ்ய கிர்யமாணம் மயாரணம்

(ஸர்க்கம்63, பாடல் 33,34, வால்மீகி ராமாயணம்)

பொருள்:” மன்னா ! அவசியமாக உனக்கு நன்மை பயக்கும் சொற்களையே எப்போதும் நான் சொல்ல வேண்டும். சகோதர பாசத்திலும் சொந்தம் என்ற பற்றிலுமே நான் இவ்வாறு பேசினேன்.

ஆனால் இப்போது சகோதர பாசத்தின் அடிப்படையில் நான் என்ன செய்வது நல்லதோ அதையே செய்வேன். இனிப் போர்க்களத்தில் என்னால் எதிரிகள் கொல்லப் படுவதை நீ காண்பாய்’.

ராமசரிதமானஸில் விபீடணன்

ராம சத்ய சங்கல்ப பிரபு சபா கால்பஸ் தோரி
மை(ன்) ரகுனாயக ஷரண் அப், ஜாவூ(ன்) கோரி நஹி மோரி
பொருள்:ஸ்ரீராமர் நினைப்பது தான் நடக்கும். உன்னையும் உன் மந்திரிகளையும் மரணம் சூழ்ந்துள்ளது. நான் இப்போது ஸ்ரீராமரைச் சரணடைகிறேன். என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம். (பக்கம் 676 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

ராமசரிதமானஸில் கும்பகர்ணன்:

கீன்ஹேவு ப்ரபு விரோத் தேஹி தேவக்
ஷிவ விரஞ்சி சுர் ஜாகே சேவக்
நாரத் முனி மோஹி(ன்) ஞான் ஜோ கஹேவு
கஹதேஹு(ன்) சமய் நஹி (ன்) ரஹேவு

பொருள்: தேவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் யாரின் சேவகரோ நீ அந்த தெய்வத்தை விரோதித்துக் கொண்டாய். நாரதர் என்னிடம் சொன்ன விஷயத்தை உன்னிடம் கூறினேன். இப்போது காலம் கடந்து விட்டது”
(பக்கம் 753 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

தீவீரமான ஒரு பற்றை, பாசத்தை மட்டும் வழிகாட்டுதலாகக் கொண்ட கும்பகர்ணின் பாதை மிகவும் எளியது. ராமாயண காலத்து விழுமியங்களுக்கு ஒரு முக்கியமான உதாரணம் கும்பகர்ணன். மூத்தவனாகவும், மன்னனாகவும் உள்ள ராவணனின் மீது அவன் காட்டும் விசுவாசம் தனது நாட்டின் மீதும் மக்களின் மீதும் கொண்ட மாறாப் பற்றாகும்.

விபீடணனும் லங்கையின் நன்மையைக் கருதியே ராவணனை விட்டு நீங்கியதாக, பின்னர் லங்கை அரக்கர் வசமே தொடர ஒரு அடித்தளம் அமைத்ததாகக் கூட வாதிடலாம். அதுவே சரியாகவுமிருக்கலாம்.

ஆனால் விபீடணன் ஒரு அரசியல் நிபுணத்துவத்தின், கூரிய, ஆய்ந்து அறியும் புத்திசாலித்தனத்தின் உருவகமாகவே தென்படுகிறான். கும்பகர்ணனோ நெல்வயலில் பாய்ந்த நீர் மண்ணோடு பிணைந்திருப்பது போல் இறுதி வரை தன் நாட்டுடனும் சகோதரனுடனும் சேர்ந்திருந்துப் பிறகு உயிரையும் தியாகம் செய்கிறான்.

சமுதாயம் அல்லது அரசாங்கம் என்னும் யந்திரங்கள் கும்பகர்ணன் போன்றோரது விசுவாசம் என்னும் சக்கரத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. அரசியலோ ராஜதந்திரமோ அறியாதவராகவோ அல்லது அதற்கு வாய்ப்பற்று அடிபணிபவராகவோ இருப்போரே ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள்.

இவரை நெறிப் படுத்துவதற்காக இயற்றப்பட்ட புழக்கத்திலிருந்த எழுதப் படாத சட்டங்கள் எத்தனையோ. அவற்றை ஒட்டியும் அதற்கு மேல் மண் மீது தாம் கொண்ட பிடிமானத்தைத் தொட்டும் இவர்தம் மனசாட்சி இயங்குகிறது.

இந்த மனசாட்சியே இவர்களை சமூகத்தின் வலிமையான அங்கங்களாய் இயக்குகிறது. இவர்களில் அபூர்வமாக யாரேனும் தனது தனி மனித மன எழுச்சியில் தாறுமாறான மீறல்களைச் செய்ய யத்தனித்தாலும் அதை அவருக்கு இணையான பின்ன ணி உள்ள சமூகத்தின் பிரஜைகள் தடுத்து நிறுத்துகின்றனர்.

எனவே அதிகாரம் என்ற ஒன்று ஒரு மனிதன் தனிமனிதனா சமூகத்தின் அங்கமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான அளவு கோல் என்று பிடிபடுகிறது. மேலும் வாசிப்போம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9

யுத்த காண்டம் – மூன்றாம் பகுதி

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

யுத்த காண்டம் மிகவும் நீண்டது. விபீடணனைத் தவிர ராவணனின் அரச குல ஆடவர் அனைவரும் போரில் மடிகின்றனர். இவருள் இந்திரஜித் என்னும் ராவணனின் மகனும் கும்பகர்ணனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

யுத்தத்தில் பல்வேறு நிலைகளில் வெவ்வேறு விதமாக ராமனும் வானர சேனையும் மறுபக்கம் ராவணனும் அவனது வீரரும் முன்னேற்றமோ பின்னடைவோ கொள்கின்றனர். மாயாஜாலங்களில் பெரிதும் சிறந்தோராக அரக்கரும் திவ்யாஸ்திரங்களில் மிகவும் உயர்ந்தோராக ராமலட்சுமணரும் வர்ணிக்கப் படுகின்றனர். யுத்தத்தின் ஒவ்வொரு நிலையிலும் விபீடணன் ராவணனது ரகசியங்களை ராமனுக்குத் தெரியப்படுத்துகிறான். அதனால் யுத்தத்தைக் கொண்டு செல்ல வேண்டிய வழி புலனாகிறது. பல்வேறு வரங்களையும் மாயக்கவசங்களையும் பெற்ற ராவணனனை வீழ்த்துவது ராம-விபீடண கூட்டணியினால் மட்டுமே சாத்தியமாகிறது.

அறவழியில் செல்லுபவனாகவும் அரசியல் ரீதியாகவும் விபீடணன் ராமனிடம் சரணடைந்தது ஆகச் சிறந்த முடிவாகவே அமைகிறது. ராமாயணத்தை வாசிப்போர் யாருக்கும் விபீடணின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இறுதியாக ராவணன் வீழ்த்தப்பட்டு அவனது உடல் தரையில் கிடக்கிறது. அப்போது அருகில் இருப்பது ராமலட்சுமணனும் அனுமனும் விபீடணனும். இந்தக் காட்சியில் விபீடணனைப் பொருத்த அளவில் அவனது சகோதரன் பிணமாகிக் கிடக்கிறான். யுத்தத்தின் ஒரு நிலையில் இந்திரஜித்தின் நாக அஸ்திரத்தில் அடிபட்டு லட்சுமணன் நினைவிழக்கிறான். அப்பொது ராமன் மிகவும் மனம் துயறமுற்று வருந்துகிறான். அந்த வருணனைகளை வாசிக்கிறோம். இப்போதோ ராவணன் உயிரையே துறந்து விட்டான். அவனது சகோதரன் விபீடணனின் மனநிலை யாது? உலகுக்கெல்லாம் அவன் கொடிய அரசனாயிருக்கலாம். ஆனால் விபீடணனுக்கு சொந்த அண்ணன். அதனாலேயே தகப்பனுக்குச் சமமானவனும் ரத்தத்தின் உயிர்0த் துடிப்போடு நேசிக்கப்படுபவனும். இல்லையா?

முதலில் கம்பராமாயணத்தின் படி விபீடணனின் எதிர்வினையைக் காண்போம்:

காத்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்னக் கற்கும்
வார்த்தை உண்டு அதனைக் கேட்டு நாணுறு மனத்தினேற்கும்
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பு போலாம்
நேர்த்தலும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க

மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கும் இசை முயங்க மாட்டாது
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண
பூண் தொழில் உடைய மார்பா! போர்ப்புறங்கொடுத்தோர்ப் போன்ற
ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அவத்தம் என்றான்

பொருள்: காத்தவீரியன் என்னும் ஒருவன் ராவணனைக் கட்டிப் போட்டான் என்று ஒரு சொல் உண்டு. இன்னொருவனால் தோற்கடிக்கப்பட்டவனை வெற்றி கொள்ளும் படி ஆகிவிட்டது. அவனது புறமுதுகிலும் புண் பட்டதால் நான் அவனை வென்ற விதம் தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். கயிலை மலையின் கீழே நசுங்கியவன் இந்த ராவணன்.

இந்தப் போரில் நான் மரித்திருந்தாலும் அது மேலானது. இனி உயிர் வாழ்ந்து உண்டு களிப்பேன் எனப் பகைவர் எள்ளி நகையாடக்கூடும். புறமுதுகிடும் தொழிலானவனான ராவணனைக் கொன்று நான் பெற்ற வெற்றி அபத்தமானது என்றான்.
(பாடல் 3848, 3849 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

இதற்கு விபீடணின் பதில்:
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஜய
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த
தாயினும் தொழத் தக்காள் மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின் முனிவும் அல்லால் வெல்வரோ நுவலற்பாலார்

பொருள்: தேவர்கள் அளித்த சாபத்தினாற்தான் ஆயிரம் கைகளுடைய காத்தவீரியனும் வாலியும் ராவணனை வென்றது. சீதை தாயினும் தொழத் தகுந்தவள். அவள் மீது கொண்ட ஆசையும் தங்களது சினமுமே அன்றி வேறு எதுவும் அவனை வெல்ல இயலாது. (பாடல் 3851 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

மேற்கண்டவாறு தொடங்கிப் பலவிதமாகவும் விபீடணன் ராமனின் வெற்றி மிகவும் போற்றுதற்கு உரித்தானதே என்று விளக்குகிறான். அவனது உரை முடிவில் ராமன் சொல்கிறான்:

அன்னதோ என்னா வீரன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணாதக்கது அன்றால்
என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி என்றான்
(பாடல் 3856 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

பொருள்: தன்னைப் பற்றிய ஐயமும் நாணமும் நீிங்கப் பெற்ற மாவீரனாகிய ராமன் தனது தோள்களைப் பெருமையோடு பார்த்துக் கொண்டான். பிறகு ” விபீடணா ! இது என்ன? இறந்தவன் மீது ஏன் இந்த வெறுப்பு? நூல்கள் சொல்லிய விதமாக அவனுக்குரிய ஈமைக் கடன்களைச் செய்வாயாக” என்றான். (பாடல் 3857 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

போழ்ந்ததென அரக்கன் செய்த புண்தொழில் பொன்றயிற்று ஆமால்
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக்கான் வகுத்தி என்ன
தாழ்ந்தது ஓர் கருணை தன்னால் தலைமகன் அருள் தள்ளி
வீழ்ந்தனன் அவன் மேல் விழ்ந்த மலையின் மேல் மலை வீழ்ந்ததென”

பொருள்;” ‘இதயத்தையே பிளந்தது போல் சீதையைச் சிறைப்பிடித்த ராவணனின் குற்றச்செயல் அவன் மரணத்தோடு முடிந்தது. வாழ்பவனாகிய நீ ஏற்ற ஈமைக்கடன்களைச் செய்வாயாக.’ என்னும் கருணை மிக்க ராமனின் சொற்களைக் கேட்ட விபீடணன் ஒரு மலையின் மேல் மற்றொரு மலை வீழ்ந்தது போல ராவணனின் உடலின் மீது வீழ்ந்தான்.

எவரும் உலகத்து எல்லா உயிர்களும் எரியும் நெஞ்சின்
தேவரும் முனிவர் தாமும் சிந்தையின் இரக்கம் சேர
தாஅரும் பொறையினான் தன் அறிவினால் தகைக்க நின்ற
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகுவாய் ஆர

பொருள்: பொறுமையில் பழுதற்ற விபீடணன் தன் அறிவினால் அடக்கி வைத்திருந்த ஆற்றாமையும் துயரமும் தீர வாய் விட்டு அழுது புலம்பினான். அதைக்கண்ட தேவர், முனிவர், உலகத்து உயிர்கள் அனைவரது மனமும் ராவணனின் கொடுமையால் கொண்ட கொதிப்பு நீங்கி அவன் பால் இரக்கம் கொண்டனர். மேற்கண்டவாறு தொடங்கிப் பலவிதமாகவும் விபீடணன் ராமனின் வெற்றி மிகவும் போற்றுதற்கு உரித்தானதே என்று விளக்குகிறான். அவனது உரை முடிவில் ராமன் சொல்கிறான்:

அன்னதோ என்னா வீரன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணாதக்கது அன்றால்
என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி என்றான்
(பாடல் 3856 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

பொருள்: தன்னைப் பற்றிய ஐயமும் நாணமும் நிங்கப் பெற்ற மாவீரனாகிய ராமன் தனது தோள்களைப் பெருமையோடு பார்த்துக் கொண்டான். பிறகு ” விபீடணா ! இது என்ன? இறந்தவன் மீது ஏன் இந்த வெறுப்பு? நூல்கள் சொல்லிய விதமாக அவனுக்குரிய ஈமைக் கடன்களைச் செய்வாயாக” என்றான். (பாடல் 3859 யுத்தகாண்டம் கம்பராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில்
ததஸ்து சுக்ரீவவிபீஷணாங்கதாஹா
சஹருத்விஸிஷ்டாஹா ஷஹலக்ஷ்மணஸ்ததா
ச்மேத்ய ஹ்ருஷ்டா விஜயேன ராகவம்
ரணோபிராமம் விதிநாப்யபூஜயன்

பொருள்: சுக்ரீவன், விபீடணன், அங்கதன் மற்றும் லட்சுமணனும் அவர்தம் சகாக்களும் ஸ்ரீ ராமசந்திரரின் வெற்றியில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் அவருக்கு விதிப்படி பூஜை செய்தனர். (பாடல் 33 ஸர்க்கம் 108 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ப்ராதம் நிஹதம் த்ருஷ்ட்வா ஷயானம் நிர்ஜிதம் ரணே
ஷோகவேகபரிதாத்மா விலலாப் விபீஷண

பொருள்: தோற்ற சகோதரனின் பிணம் தரையில் கிடப்பதைப் கண்ட விபீடணனின் மனம் துயரத்தில் ஆழ்ந்தது. அவர் அழுது புலம்பினார். (பாடல் 1 ஸர்க்கம் 109 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஏஷோ அஹிதாக் நிஷ்ச மஹாதபாஷ்ச்ச
வேதந்தகஹ சாத்ரயஷூரஹ
ஏதஸ்ய யத் ப்ரேதகதஸ்ய க்ருத்யம்
தத் கர்த்துமிச்சாமி தவ ப்ரசாதாத்

ஸ தஸ்ய வாக்யைஹி கருணைமகாத்மா
சம்போதிதஹ சாது விபிஷணேன்
ஆக்யாபயாமாச நரேந்த்ரஸுனுஹூ
ஸ்வர்கீயமாதாமை தீனஸத்வஹ

பொருள்: இந்த ராவணன் அக்னி ஹோத்ரி, பெரிய தபஸ்வி, வேதாந்தி மற்றும் யாகம் யக்ஞங்களில் சூரன்- அதாவது மிகவும் கருத்தானவன். இவன் மரணமடைந்துள்ளதால் தங்கள் தயையுடன் நான் இவனுக்கு கிரியைகள் செய்ய விரும்புகிறேன்.
விபீடணனின் இறைஞ்சும் சொற்களைக் கேட்ட கருணை மிக்க இளவரசர் ராமர் நல்லோரை சொர்க்கமடையச் செய்யும் இறுதிச் சடங்குகள் செய்ய ஆணை தந்தார். (பாடல் 23,24 ஸர்க்கம் 109 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ராமசரிதமானஸில் விபீடணன் துக்கமடைந்தானென்று குறிப்பிடப் பட்டுள்ளது. கதறி அழுததாக இல்லை.

க்ருபா த்ருஷ்டி ப்ரபு தாஹி விலோகா
கரஹு க்ரியா பரிஹரி சப் ஷோகா
கீன்ஹ க்ரியா ப்ரபு ஷ்ராய்ஸுமானி
விதிவத் தேஷ கால கதி ஜானி

பொருள்: கருணை மிகுந்த பார்வையுடன் விபீடணனிடம் ராவணனின் அந்திமக் கிரியைகளைச் செய்து சோகத்தை விடும் படி ராமர் கட்டளையிட்டார். காலம் இடம் இரண்டையும் கருத்திற் கொண்டு விபீடணன் ராமரின் கட்டளைப் படி கிரியைகளைச் செய்து முடித்தான் (பக்கம் 800 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

கம்பராமாயணத்தை ஒப்பிடும் போது மற்ற இரு ராமாயணங்களிலும் விபீடணன் நிலை தேவலாம். அதாவது அழுவதற்குக் கூட ராமனின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. இருந்தாலும் மூன்றுக்கும் பொதுவான ஒன்று ஈமக்கிரியைகள் செய்ய ராமன் ஆணையிட்டான் என்பது. வாசிக்கும் போதே மிகவும் மனச்சங்கடத்தை ஏற்படுத்துவது. தனது சகோதரனுக்கு இறுதியாகச் செய்ய வேண்டிய கடமைக்கும் இன்னொருவர் (அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்றாலும், நல்லவர் என்றாலும்) அனுமதி நோக்கி நிற்கும் நிலை அரசியல் ஒரு தனி மனித வாழ்க்கையை ஒரு குடும்பத்தின் ஒப்பற்ற மனித உறவுகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். சமுதாயத்தின் அங்கமாக இங்கு விபீடணன் செயற்படவில்லை. அதே சமயம் தன்னுள் பீறிட்டெழும் பாசத்தையும் அடக்கிக் கொண்டிருக்கிறான். இது ஆண்டான் அடிமை என்னும் நிலையில் இயங்க வேண்டிய கட்டாயத்தையே காட்டுகிறது. அது , தானே விபீடணன் வலிந்து ஏற்றதோ ?

ராமாயணம் அடிப்படையில் மன்னன் அல்லது மன்னர் குடும்பங்களின் வரலாறே. எனவே இந்த வாசிப்பு பண்பாட்டுக்கு முன்னுதாரணமாக, மையமாக, வழிகாட்டியாக விளங்கியோர் பற்றியது. மன்னன் கடவுள் இல்லை என்பது ஒன்றைத் தவிர அவன் நடமாடும் தெய்வமாக வழிபடப் பட்டான். எல்லா கதா பாத்திரங்களையும் பின்னணி அடிப்படையில் இரு வகையாக்கலாம் – மன்னர் குலம் மற்றவர் என. மன்னர் குலத்தவர் தமது வட்டத்துக்குள் பின் பற்றும் மனித உறவு வரையறைகள் மற்றும் ஏனையர் அவர்களோடு பழக வேண்டிய முறை என நாம் சில பாரம்பரியங்களைக் காண்கிறோம்.

“தனி மனிதன் என்பதா அல்லது சமுதாயத்தின் அங்கம் என்பதா” என்னும் நம் கேள்விக்கான் விடை அதிகார மையத்தைச் சுற்றி அமையும் என்னும் எண்ணம் யுத்த காண்டத்தைத் தொடர்ந்து வாசிக்கும் போது நம்முள் வலுக்கிறது.

அதிகார மையம் மெல்லிய அசைவு கொண்டால் அது தனிமனித வாழ்க்ககளைப் பெரிய பூகம்பமாய்ப் புரட்டிப் போடுகிறது. தனி மனிதனின் மீது சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தாக்கம் தவிர்க்க இயலாதது. ஆனால் அந்த சூழ்நிலைகளை அதிகார மையமே நிர்ணயிக்கிறது. ஒருவனது இருப்பு தன்னருகிலும், தன்னுள்ளும் அல்லது தன்னை விட்டு விலகியும் இவற்றுள் எதையுமே அதிகார மையமே தீர்மானிக்கிறது.

அதிகார பீடத்தில் அமர்வதோ அதன் ஆதரவாக இயங்குவதோ அதிக சுதந்திரம் கிடைக்கிற பணிகள் ஆகா. இந்தக் கோணம் வசப்பட தொடர்ந்து வாசிக்கிறோம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10

யுத்த காண்டம் – நான்காம் பகுதி

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

சமுதாயம் அல்லது மனித குலம் என்று நோக்கும் போது ஒரு அரசன் அல்லது அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன் உதாரணமாகப் பின் பற்ற வேண்டிய அறநெறிகள் என தொன்று தொட்டுப் பாரம்பரியமாகவும், எழுத்து பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டதுமான வழிகாட்டு நெறிகள் உள்ளன.

ஆனால் இவை குறைந்தபட்ச நெறிகளே. இதைத் தாண்டி நேர்மறையான நோக்கில் மனிதநேய அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தனிமனிதனோ சமூகமோ அரசனோ தானே முன்வந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு. இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க முடியாது. மனிதநேயமும் தூங்காத மனசாட்சியுமே ஒருவருக்கு வழி காட்ட முடியும். எந்த அளவுக்கு அவர் தன்னலமற்று தனது கடமையை உணர்ந்து செயற்படுகிறாரோ அந்த அளவு ஒரு புதிய முன்னுதாரண ஆளுமையாகவும் ஒரு வித்தியாசமான சூழலில் முன்னுதாரணமான நடவடிக்கையாகவும் அது அமைகிறது.

ஆனால் இத்தகைய நேர்மறையான நிகழ்வுகளை விடவும் எதிர்மறையானவையே பலரது கவனத்தையும் பெறுவது கவலைக்குரிய விஷயம். ஒரு ரயில் ஓட்டுனர் ஒரு விபத்தை சமயோசிதமாகத் தடுத்தால் எந்த அளவு அந்த சிறப்பான செயல் கவனம் பெறுகிறது? அது அவரது கடமை தானே என்பது போல எளிதாகக் கருதப்படுகிறது. மாறாக ஒரு விபத்து நிகழும் போது கண்டனங்களும் தண்டனையும் பெரும் கவனம் பெறுகின்றன.

ஒரு புறாவை ஒரு கழுகு துரத்தி வரும் போது சிபிச் சக்கரவர்த்தி தனது உடலின் ஒரு பகுதியை வெட்டிக் கொடுத்து அந்தப் புறாவைக் காப்பாற்றுகிறார். இதை அவரது கடமை என்று சொல்லலாமா? சமுதாயத்தின் ஒரு அங்கமாக அவர் செய்திருக்க வேண்டும் என்று சொல்லலாமா?

அவர் காப்பாற்றியதை ஒரு அரசனின் செயல் என்று பார்க்கும் போது அதிர்ச்சியே ஏற்படுகிறது. வேட்டையாடுவது அரசர்களின் மிகப் பெரிய பெருமிதத்திற்குரிய விஷயமாக இருந்திருக்கிறது. போரிட்டு அக்கம்பக்க தேசங்களை ஆக்கிரமிப்பது போற்றப்பற்று வந்திருக்கிறது. முல்லைக் கொடிக்குத் தனது தேரையே தந்த பாரி வள்ளலைப் போல, மயிலுக்காகத் தனது மேலங்கியைத் தந்த பேகனைப் போல ஏன் பல மன்னர்களின் நேயமும் பரிவும் உள்ள நிகழ்ச்சிகள் அதிகமில்லை ?
ராமாயணத்தின் மிக நீண்ட பகுதியான யுத்த காண்டத்தில் நாம் காண்பது மிகப்பெரிய உயிர்ச்சேதங்களையும் அழிவையுந்தான். பிற காண்டங்களிலும் ஒரு அரச குடும்பத்தில் எழும் பிரச்சனைகளும் தீர்வுகளும் மற்ற அரசியல் நிகழ்வுகளுமாகவே காண்கிறோம்.

இப்படி முழு ராமாயணத்திலுமே ஒரு மன்னன் (அல்லது மன்னர் குல உறுப்பினர்) நேயமும் பரிவுமாக நடக்கவே இல்லையா ? மன ஆறுதலாக இத்தகைய ஒரு செயலை சீதை செய்கிறாள். ராவண வதத்திற்குப் பிறகு சீதையைப் பணிந்து அனுமன் சீதைக்குக் காவலிருந்த அரக்கியரைக் கொல்வேன் என்கிறான். அப்போது சீதை அவனைத் தடுக்கிறாள்.

அனுமன் கூறியது கம்பராமாயணத்தில்

என உரைத்து திரிசடையாள் எம் மோய்
மனவிடில் சுடர் மாமுக மாட்சியாள்
தனை ஒழித்து அவ்வரக்கியர் தங்களை
வினையில் சுட வேண்டுவென் யான் என்றான்

பொருள்: ஒளி பொருந்திய களையான் முகம் உடையவளான திரிசடை ஒருத்தியைத் தவிர ஏனைய அரக்கியரைக் கடுமையாக வதைத்துக் கொல்ல விரும்புகிறேன் என அனுமன் வேண்டினான். (பாடல் 3923 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

சீதையின் பதில்:
யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியர் கொடியார் அலரே இவர்
போன அப்பொருள் போற்றலை புந்தியோய்

பொருள்: தாயை விடவும் அன்பானவனே! கூனியை விடவும் இவர்கள் கொடியவர்கள் அல்லரே. எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் என் முன் வினை பயனே ஆகும். நடந்து முடிந்தவற்றைப் பொருட் படுத்தாதே. (பாடல் 3927 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

எனக்கு நீ அருள் இவ்வரம் தீ வினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனள் மாமதி
தனக்கு மாமறுத் தந்த முகத்தினாள்

பொருள்: வானத்து நிலவு களங்கமுற்றது என்று கருதுமளவு அழகிய முகம் கொண்ட சீதை கூறினாள் ‘இந்த அரக்கியர் மனதைத் துன்பம் கொள்ளச் செய்யாதே. தீவினையின் இருப்பிடமான இவர் அறிவற்றோர் ஆவர்’ (பாடல் 3928 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில் சீதையின் சொற்கள்:

க்ளிஷ்யந்தி ஸ்ரீதேவான் த்வாமஷோகவணிகாம் கதாம்
கோரரூபஸமாசாராஹா க்ருராஹா க்ரூரதரேஷணாஹா

இஹ ஷ்ருதா மயா தேவி ராஷஸோ விக்ருதானனாஹா
அஸ்க்ருத் புருஷைர் வாக்யார்வதந்த்யோ ராவணாக்யயா

விக்ருதா விக்ருதாகாராஹா க்ரூராஹா க்ரூரகசேஷணர
இச்சாமி விவிதைர்தாதைர்ஹந்து மேதாஹா சுதாருணாஹா

பொருள்: தங்களைப் போன்ற தூய்மையான பெண்மணி அசோகவனத்தில் அமர்ந்து துக்கம் அனுபவித்து வரும் போது உருவத்திலும் நடவடிக்கைகளிலும் கோரமான இந்த ராட்சஸிகள் தங்களை மிரட்டியும் வசை பாடியும் வந்தனர். ராவணனின் ஆணைப்படி தங்களை என்னென்னவிதமாய் ஏசினார்கள் என்பதை நான் இந்த வனத்தில் நேரிலேயே கண்டிருக்கிறேன்.

இவர்கள் அனைவருமே கோரமும் குரூரமான தோற்றமும் இயல்பும் முழுக்க முழுக்க நிரம்பப் பெற்றவர்கள். இவர்கள் கண்களிலிலும் மற்றும் தலைமுடியிலும் கூட குரூரத்தன்மை சொட்டுகிறது. பலவிதமான வழிகளில் இவர்கள் அனைவரையும் நான் வதம் செய்ய விரும்புகிறேன். (பாடல் 30,31,32 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஆக்யத்பா ராஷசேனேஹ ராஷஸ்யஸ்த்ர்ஜய்ன்தி மாம்
ஹதே தஸ்மின் ந கர்வந்த்திதர்ஜனம் மஹநாத்மஜே

பயம் வ்யாக்ரசமீபம் த் புராணோ தர்மஸ்ம்ஹிதஹ
ருக்ஷேன கீதஹ ஷ்லோகோஅஸ்மின் தம் நிவோத ப்லவங்கம

வாயு புத்திரனே! இவர்கள் அந்த ராட்சஸனின் ஆணைப்படியே பல தீய செயல்களைச் செய்தனர். அவன் கொல்லப்பட்ட பிறகு இவர்கள் என்னை பயமுறுத்துவதையும் மிரட்டுவதையும் விட்டுவிட்டனர்.

வானரவீரனே! புராணங்களில் இருந்து ஒரு சுலோகம் சொல்லுகிறேன். இது ஒரு புலிக்கு ஒரு கரடி சொல்லியதாகும்.
(பாடல் 42 43 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

(இந்தக் கதை குறிப்பாகவே சொல்லப்படுகிறது சீதையால். வால்மீகி ராமாயணப் பிரதியில் அனுபந்தமாகவே முழுக்கதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.) அந்தக்கதை: ஒரு நாள் வேடன் ஒருவனை ஒரு புலி துரத்தியது. அங்கும் இங்கும் ஓடிய அவன் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆனால் அங்கோ ஒரு கரடி இருந்தது. “என்னைக் காப்பாற்று” என்று அவன் கரடியிடம் சரணடைந்தான். கரடியும் அவனைக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தது. ஓடிக் களைத்திருந்த வேடன் சற்று நேரத்திலேயே உறங்கி விட்டான். புலி அப்போது மரத்தின் கீழே வந்தது. ‘நண்பா. நாமிருவரும் விலங்கினம். இவன் மனித இனம். அதுவும் வேட்டையே தொழிலாகக் கொண்டவன். எனவே நம் இருவருக்குமே எதிரி. இவனை நீ காப்பாற்றினாலும் நாளை முதல் நம் இனத்துக்கு உள்ள ஆபத்து நீங்கப் போகிறதோ? இல்லை. எனவே நீ இவனை மரத்திலிருந்து கீழே என்னிடம் தள்ளி விடு.’ என்றது. கரடி உறுதியாகச் சொன்னது ‘ என்னிடம் தஞ்சம் அடைந்தவனை உன்னிடம் இரையாகக் கொடுப்பது தர்மம் ஆகாது. இதனால் இவ்வுலகில் அவப்பெயரும் அவ்வுலகில் நரகமுமே கிட்டும்.’ என்றது. புலி கரடியின் உறுதியைக் கண்டு அதிசயித்தது. ஆனாலும் வேறெங்கும் போகாமல் மரத்தின் அடியினிலேயே காத்திருந்தது.

சற்று நேரத்தில் விழித்தெழுந்த வேடன் கீழே புலியைக் கண்டு மரத்தை விட்டு இறங்கவில்லை. ‘கவலைப்படாதே’ என்று அவனுக்கு ஆறுதல் கூறி கரடி தூங்கிவிட்டது. அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது புலி வேடனைப் பார்த்து ‘உனக்கு புத்தி இல்லையா? என்னைப் போலவே அவனும் உன்னைக் கொன்று தின்பவன் தான். உன்னை இப்போதைக்கு மரத்தில் இருத்தி வைத்திருப்பதற்காகவே இத்தனையும் பேசினான். உன்னுடைய இனம் அல்லவே அவன். அதனால் அவனை என்னிடம் நீ தள்ளிவிடு. அவ்வாறு நீ செய்தால் நான் உனக்குப் பதிலாக அவனை உணவாக உண்டு விடுகிறேன். இதனால் நம் இருவரது நோக்கமும் ஒரே சமயத்தில் நிறைவேறும்’ என்றது. புலியின் யோசனையைப் பரிசீலித்த வேடனுக்கு அது சரி என்றே பட்டது. எனவே அவன் தூங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். தனது இயல்பிலேயே எச்சரிக்கை உணர்வுள்ள கரடி விழித்து ஒரு கிளையைப் பற்றி மரத்திலிருந்து விழாமல் தன்னைக் காத்துக் கொண்டது. அது தன்னைக் கட்டாயம் கொல்லும் என அஞ்சிய வேடன் நடுங்கித் தன் தவறுக்கு வருந்தி அதனிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்டான். அப்போது கரடி ‘நண்பா! நீ எனக்குக் கெடுதலே நினைத்தாலும் கூட நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். உன்னைக் கொல்ல மாட்டேன்’ என்றது.

இப்போது புலி கரடியைப் பார்த்து ‘ அவன் நம் இனம் அல்லன் என்று நான் முன்பே கூறினேனே. அவன் என்ன செய்தான் பார். நன்றி கெட்ட அவனை, உனக்கு துரோகம் செய்த அவனை என்னிடம் தள்ளி விடு’ என்றது. அப்போதும் கரடி ‘ அவனது இயல்பு அப்படி இருக்கலாம்’ அவன் தீய இயல்பு கொண்டவனாகவே இருந்தாலும் நான் அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். கொடுத்ததைக் காப்பாற்றுவதைவிடவும் உயிர் எனக்கு மதிப்பானதல்ல’ என்று கூறி மனம் மாறாது வேடனை அம்மரத்தில் நிம்மதியாக இருக்க விட்டது.

தொடர்ந்து சீதை சொல்கிறாள்:
லோக ஹிம்ஸா வீராணாம் க்ரூராணாம் பாப கர்மணாம்
குர்மதாமஸி பாபானி நைவ கார்யமஷோபனம்

பிறருக்குத் துன்பம் செய்வதே இயல்பாய்க் கொண்டவர்களுக்கும் எப்போதும் பாவச் செயல்களையே செய்பவர்களுக்கும் கூடக் கெடுதல் செய்யக் கூடாது. (பாடல் 46 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ராமசரிதமானஸில் இப்படி ஒரு பரிமாற்றம் சீதைக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கவே இல்லை.
யுத்த காண்டத்தில் மட்டுமல்ல ராமாயணத்திலேயே ஒரு அபூர்வமான தருணம் அனுமனிடம் சீதை கூறும் இவ்வறிவுரை. சமுதாய விழுமியங்கள், பாரம்பரியங்கள், வழிகாட்டுதல்கள் இவற்றை நேர்மறையாக மீறிய ஒரு நிகழ்வு இது.

ராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் ராமனின் வழி நடப்போர், அவனது ஆளுகைக்குக் கட்டுப்பட்டோர் அல்லது அவனது எதிரணியில் அறமற்ற செயல்களில் ஈடுபடுவோர் என இருவகைப் பட்டோரே.

நல்ல வழியிலோ அல்லது தீய வழியிலோ ராமன் அல்லது ராவணனின் அதிகார விளிம்பிற்குள் அகப்பட்டு இயங்குவோராகவே நாம் அனைவரையும் காண்கிறோம். அபூர்வமான தருணங்களில் சில எதிர்மறையான மீறல்களைக் காண்கிறோம்.

ஆனால் ஒரு நேர்மறையான மீறல் – அதுவும் ஒரு அரசகுலப் பெண் (இளவரசி மற்றும் ராணி) ஆனவள் எவ்வாறு அரக்கிகள் என்னும் இனத்தோரின் அதிலும் கடைநிலை ஊழியராய்க் காவற் காக்கும் பெண்கள் மீது இரக்கம் கொள்கிறாள் என்பது மிகப் பெரிய வியப்பளிப்பது. கிட்டத்தட்ட அதிர்ச்சியே அளிப்பதாகும். ஒரு ராஜ குடும்ப மரபில் ஏனையோர் மீது இரக்கப்பட எந்த ஒரு முன்னுதாரணமும் கிடையாது. தன்னிடம் அடிமைகளாய் இருப்போரிடம் அரசர் குலத்தார் கருணை காட்டக் கூடும் அதுவும் கட்டாயம் இல்லை. எதிரி நாட்டில் அதுவும் அவனது அடிமைகள் அல்லது தொழிலாளிகள் மீது மாற்று நாட்டு அரசி அதுவும் கடத்தி வரப் பட்டவள் இரக்கம் காட்டியுள்ளது மிகவும் அபூர்வமாக நாம் காண்பதாகும்.

சீதையை ஒப்பிடும் போது அனுமன் இவர்தம் நிலையை அறிந்து பரிந்திட வாய்ப்பிருந்தது. ஆனால் லங்கா தகனம் என அனுமனால் லங்கை எரிக்கப்பட்ட போது அனுமன் எந்தப் பின் விளைவுகள் பற்றியும், எளிய உயிர்களுக்கு நிகழப்போகிற விபரீதங்கள் குறித்தும் கவலை ஏதும் கொள்ளவில்லை. அந்த நெருப்பில் சீதைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்னும் ஒரே கவலை அவ்வளவே.

அப்படி அனுமன் மனதில் கூடத் தோன்றாத இரக்கம் சீதையிடம் இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கலாம். விரும்பியோ விரும்பாமலோ கடைநிலைத் தொழிலாளிகளான காவற்காரப் பெண்களுடன் நீண்ட காலம் தங்க வேண்டிய கட்டாயம் சீதைக்கு ஏற்பட்டது. இது போல வேறு எந்த ராஜ குடும்ப அங்கத்தினருக்கும் ஒரு இக்கட்டு ஏற்படவில்லை. எனவே சீதையால் அந்தப் பணிப் பெண்களின் நிலையை உணர இயலுகிறது.

சமுதாயத்தில் பேச்சு வாக்கில் குறிப்பிடப் படும் மனசாட்சி இப்படித்தான் வேறுபடுகிறது. மன்னர் குடும்பத்துக்கு என்று தனி மனசாட்சி உண்டு. அடிதட்டு மக்களுக்கு வேறு மனசாட்சி.

மற்ற காவியங்களை ஒப்பிட ராமாயணம் ஒரு நிகழ்ச்சியை வேறு கோணத்திலும் பரிமாணத்திலும் காட்டியிருப்பது குறிப்பாக இந்தக் காட்சியில் தென்படுகிறது.

சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் அல்லது அறநெறி குறித்த அணுகுமுறை எதிர்மறையான கோணத்தில் மட்டுமே அணுகப்படுகிறது. நேர்மறையான அணுகுமுறை தனிமனிதரின் பின்னணி மற்றும் சூழல் பற்றிய புரிதலை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும்.

மனித நேயத்தில் பரிவில் புதிய அத்தியாயங்கள் நேர்மறையான மீறல்களிலேயே துவங்கின. ஏனெனில் அரசனை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பின் அணுகு முறையில் எளியோரின் இடர்களை சீர் தூக்கிப் பார்க்க இடமே இருக்கவில்லை. அவர் தம் உரிமையை மனதிற் கொள்ளும் போதே மனித நேயம் முழுமை பெறும்.

ஒரு பீடத்தில் இருந்து பிச்சை போடுவது போல கருணை காடும் போது அவரது அவல நிலையோ அல்லது உரிமைகளோ எதுவுமே கண்ணிற் படாது.

அதிகார மையம் மட்டுமல்ல அனுபவமும் வித்தியாசமான சூழலின் அறிமுகமும் கூட தனி மனித அல்லது சமுதாய நோக்கு சிந்தனையை முடிவு செய்கிறது என்னும் புதிய கோணத்துடன் மேலும் வாசிப்போம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
சத்யானந்தன்

யுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி

யுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே உணர்ந்தான். ஒரு அரசன் என்னும் நிலையில் பல மரபுகளை நிலை நாட்ட அவன் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது.

க்ஷத்திரிய தர்மம் என்று முன்னாளில் கடைப்பிடிக்கப் பட்டவற்றில் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள இயலாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் போது மகாபாரதப் போருக்கான மூல காரணம் தருமரால் தன்னை சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்க முடியாமற் போனதே. ஒரு க்ஷத்திரியன் இன்னொரு க்ஷத்திரியன் சூதாடக் கூப்பிட்டால் மறுக்கக் கூடாதாம். இதே போலத்தான் ராவண வதத்திற்குப் பிறகு ராமனும் சீதையும் சந்திக்கும் இடம் நம்மை நிலைகுலையச் செய்யுமளவு அதிர்ச்சி தருகிறது.

முதலில் ராமன் சீதையைத் தன்னிடம் அழைத்து வரச் செய்யும் ஏற்பாட்டைக் காண்போம்.

நின்ற காலை நெடியவன் வீடண
சென்று தா நம் தேவியை சீரொடும்

பொருள்; மேன்மையுடையவனான ராமன் “விபீடணா! எனது தேவியை அலங்கரித்து அழைத்து வா” என்றான். (பாடல் 3929 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

இதற்கு சீதையின் பதிலைக் காண்போம்.

யான் இவண் இருந்ததன்மை இமையவர் குழுவும் எங்கள்
கோனும் அம் முனிவர் தங்கள் கூட்டமும் குலத்துக் கேற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது என்று வீர

பொருள்: வீரனே ! எந்தத் தன்மையுடன் நான் இங்கே இருந்தேன் என்பதை தேவர்களும் எங்கள் அரசன் ராமனும், முனிவரும், வானளவு கற்பிலுயர்ந்த பெண்களும் காண்பது எனக்குச் சிறப்பு. அலங்கரித்து வருவது முறையாகாது.

அதற்கு விபீடணன் சொன்ன விடை:

என்றனள் இறைவி கேட்ட இராககர்க் கிறவன் நீலக்
குன்று அன தோளினாந்தன் பணியின் குறிப்பு இது என்றான்
நன்று என நன்கை நேர்ந்தாள் நாயகக் கோலம் கொள்ள
சென்றனர் வான் நாட்டுத் திலோத்தமை முதலோர் சேர

பொருள்: ராட்சஸர்களின் அரசனான விபீடணன் நீல மலை போன்ற தோள்களை உடைய ராமன் இட்ட கட்டளை இது என்று சீதையிடம் கூற அவளும் அதுவே சரி என அலங்கரித்துக் கொள்ள தேவலோகத்துத் திலோத்தமையும் மற்றவரும் சூழக் கிளம்பினாள். (பாடல் 3933 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில்

ததஹ சீதாம் மஹாபாகாம் த்ருஹ்டோவாச் விபீஷணஹ
முகனிம் பக்தாஞ்சலிஹி ஸ்ரீமான் வினிதோராஷஸேஸ்வரஹ
திவ்யாலங்கராகா வைதேஹி திவ்யாபரண பூஷிதா
யானமோரேஹ பத்ரம் தே பர்த்தாத்வாம் த்ரஷ்டுமிச்சஸி

பொருள்: இதன் பிறகு லங்கை அரசன் விபீடணன் சீதையைப் பார்க்கச் சென்று பணிவுடன் அவளை வணங்கிக் கூறினான்: விதேஹ ராஜகுமாரி ! தாங்கள் குளித்து முழுதும் அலங்காரத்துடன் ரதத்தில் வாருங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும். தங்களது கணவர் தங்களைக் காண விரும்புகிறார்.

அதற்கு சீதையின் பதில்:
ஏவ முக்தா து வைதேஹி ப்ரயுவாச விபீஷணம்
அஸ்த் ராத்வா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ரக்ஷஸேஷ்வர
தஸ்யாகத் வசனம் ஷ்ருத்வா ப்ரத்யுவாச விபீஷணஹ
யதாஅ அஹ ராமே வர்த்தாதேதத் தத கர்த்துமர்ஹஸி
தஸ்ய தத் வசனம் ஷ்ருத்வா மைதிலி பதிதேவதா
பத்தூர்பக்யாவ்ருதா ஸாத்வி ததேதி ப்ரத்பாஷத

பொருள்: விபீடணன் கூறியதைக் கேட்டதும் வைதேஹி ” நான் குளிக்காமலேயே உடனே இப்போதே எனது கண்கண்ட தெய்வமான கணவரைக் காண விரும்புகிறேன் என்றாள்.

இதற்கு விபீடணன் “தேவி! நான் கூறியது தங்களது கணவர் ஸ்ரீராமரின் கட்டளை. தாங்கள் அவ்வாறே நடக்க வேண்டும்.” என்றான்.

இதைக் கேட்டதும் பதிபக்தியில் பாதுகாக்கப்படுபவளும் கணவனைக் கடவுளாய் வணங்குபவளும் கற்பிற் சிறந்தவளும் நன்னெறி கொண்டவளுமான சீதை அவ்வாறே ஆகட்டும் எனத் தன் கணவனின் கட்டளையைத்தன் சிரம் மேற் கொண்டாள்.
(பாடல்கள் 9,10,11,12,13 ஸர்க்கம் 114 வால்மீகி ராமாயணம்)

ராமசரிதமானஸில்

சுனிவாணி பதங்க குல்பூஷண்
போலேலியே யுவராஜ் விபீஷண்
மாருத ஸுத கேசங்க சிதாவறூ
சாதர் ஜகை சுதாலை ஷ்ராவஹூ
துரதஹிம் சகல கயே ஜஹ்(ன்) சீதா
சேவஹி(ம்) சப நிஷிசரி சபீதா
வேகி விபீஷண தினஹி(ம்) சிகாவா
சாதாதின சீதஹி(ம்) அன்ஹவாவா
திவ்ய பஸன பூஷண பஹிராயே
ஷிபிகாருசிர ஸாஜி புனி போயே
தேஹி பர் ஹரஷி சபி வைதேஹி
சுமிரி ராம சுகதாம ஸனேஹி

பொருள்: (சீதையின் செய்தியைக் கேட்ட பின்பு) ஸ்ரீராமர் விபீடணனையும் சுக்கிரீவனையும் கூப்பிட்டு நீங்கள் இருவரும் அனுமனுடன் சென்று சீதையை மரியாதையுடன் அழைத்து வாருங்கள் என்றார்.

அவர்கள் அனைவரும் உடனே சீதை இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கு ராட்சஸிகள் சீதையிடம் அடைக்கலமாய் இருந்தனர். விபீடணனின் ஆணையை ஏற்று அவர்கள் சீதைக்கு நீராட்டி விட்டனர்.
விதம்விதமான நகைகளை சீதைக்கு அணிவித்தனர். பிறகு அலங்கரித்த ஒரு பல்லக்கைக் கொண்டு வந்தனர். ராமனின் எண்ணத்துடன் சீதை அதில் ஏறி அமர்ந்தாள்.

(பக்கம் 803 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்வதெல்லாம் சீதை எந்தவிதமான அலங்காரமுமின்றியே ராமனை சந்திக்க விரும்பினாள். ஆனால் ராமன் தனது தூதுவர்கள் மூலம் அவள் நன்கு அலங்கரிக்கப் படுவதே தன் விருப்பம் என ஆணையிட்டு அதைச் சொல்லி அனுப்புகிறான். வாலி வதையில் ஏதேனும் கேள்விகள் விடை தெரியாது மீதி இருந்திருந்தால் அவை இனி நடக்கப் போகிறவை முன் தூசாக மறையும்.

தொடர்ந்து வாசிப்போம்- அலங்கரிக்கபட்டு வந்த சீதையைப் பார்த்து ராமன் கூறியது கம்ப ராமாயணத்தில்:

வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா

ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திரம்பரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அக்சம் தீர்ந்து
மீண்டது என் நினைவு? எதை விரும்பும் என்பதோ

உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற
பின்னை மீட்டு உறுபகை கடந்திலேன் பிழை
என்னை மீட்டான் பொருட்டு இலங்கை எய்தினேன்

பொருள்: கற்பின் உறைவிடமானவளும் தன்னை வணங்கியவளுமான சீதையை கோபத்துடன் படமெடுத்தாடும் பாம்பைப் போல ராமன் நோக்கினான்.

ஒழுக்கம் பாழ் பட்டு பல அறுசுவை உணவுகளை உண்டு நீண்ட காலம் அரக்கனின் நகரத்தில் வாழ்ந்து விட்டு என் நினைவு எப்படி வந்தது?
என்னை இவன் விரும்புவான் என எண்ணினாயோ?

கடலைத் தூர்த்து பாலம் எழுப்பி, மின்னலையும் வெட்கி ஓடச் செய்யுமளவு ஒளி மிகுந்த அரக்கர் படையை வென்றது உன்னை மீட்பதற்கு என்றோ எண்ணினாய்? இல்லை. தனது மனைவியைக் கடத்திச் சென்றவனை ராமன் கொல்லாமல் விட்டுவிட்டான் என்னும் பழி வராதிருக்கவே போரிட்டேன். (பாடல் 3953,3954,3955 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

இத்தோடு ஏச்சு நிற்கவில்லை. தொடர்ந்து ராமன் கூறுகிறான்:
அடைப்பர் ஐம் புலங்களை ஒழுக்கம் ஆணியாச்
சடைப்பரம் தகைத்ததோர் தகையின் மா தவம்
படைப்பர் வந்து ஒரு பழி வந்தால் அது
துடைப்பர் உயிரொடும் குலத்தின் தோகைமார்

யாது யான் இயம்புவது உணர்வை ஈடுஅறச்
சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
சாதியால் அன்று எனின் தக்கது ஒர் நெறி
போதியால் என்றனன் புலவர் புந்தியான்

பொருள்: கணவனைப் பிரிந்த காலத்தில் உயர் குலப் பெண்கள் கற்பே தவமாக இருந்து (தலைமுடியை சீவிப் பராமரிக்காது) சடையையும் தாங்கி ஐம்புலன்களையும் அடக்கி வைப்பார்கள். இதையும் மீறி ஒரு பழி ஏற்படுமாயின் தமது உயிரையே விட்டு விடுவார்கள்.

புலவர்கள் மனதில் இருப்பவனான ராமன் உனது தீயொழுக்கம் பற்றிய செய்தி எனது உணர்வின் வலிமையை உடைக்கிறது. ஒன்று நீ உயிரை விடு. இல்லையேல் ஏற்ற இடத்திற்குப் போ” என்றான். (பாடல் 3959,3960 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

இந்த இடத்தில் நாம் கவனிக்கக் கூடியது சீதையின் தலை அலங்காரம் ஒரு பிரச்சனை ஆகிறது என்பது. இதைக் கேட்ட சீதை உயிரை விடத் துணிகிறாள்.

ஆதலில் புறத்தினி யாருக்காக என்
கோது அறு தவத்தினை கூறிக் காட்டுகேன்

சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே
வேத நின் பணி அது விதியும் என்றனள்

இளையவன் தனை அழைத்து இடுத் தீயென
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொடி அவன் கண்ணின் கூறினான்

பொருள்: வேத வடிவமானவனே! இனி வேறு யாருக்காக குறையற்ற என் தவத்தைப் பற்றிக் கூற வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் சாதலே சிறந்தது என் விதியும் அதுவே என்றாள்.

ஒலிக்கும் வளையல்களை உடைய கையைக் கொண்ட சீதை இளையவன் லட்சுமணனை அழைத்துத் தீயை மூட்டும் படி கூறினாள். உலகமே பணியும் பாதங்களை உடைய ராமனின் மனதை அறியவென அவனது பாதங்களில் லட்சுமணன் விழுந்து எழ கண்களால் குறிப்பாக அங்கனமே செய் என ராமன் உணர்த்தினான்.(பாடல் 3969,3970 யுத்தகாண்டம் கம்ப ராமாயணம்)

லட்சுமணனிடம் அக்கினி வளர்க்க ஜாடையாகவே ராமன் அனுமதிப்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இனி வால்மீகி ராமாயணத்தைக்
காண்போம்.

கஹ புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்டு ஹோபிதாம்
தேஜஸ்வி புனராதத்யாத் ஸுஹுல்லோபேன் சேதஸா
ராவணங்கப்பரிக்லிஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷுஷாம்
கதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஷன் மஹம்

பொருள்: நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை.

ராவணன் உன்னைத் தன் மடியில் வைத்து எடுத்துக் கொண்டு போனான். அவனது கெட்ட பார்வை உன் மீது பட்டு விட்டது, எனது குலப் பெருமை பேசும் நான் உன்னை எவ்வாறு ஏற்க இயலும்?
(பாடல் 20,21 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

ந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம்
மர்ஷயேத் சிரம் சிதே ஸ்வக்குஹே பர்யவஸ்திதாம்

பொருள்: சீதை! உன்னைப் போன்ற அழகிய அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தனது வீட்டிலேயே விட்டு விலகி இருக்கிற கஷ்டத்தை அதிக நாள் ராவணன் சகித்திருக்க இயலாது

(பாடல் 24 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

ந ப்ரமாணி க்ருதஹ பாணிர்வால்யே மம நிபீடிதஹ
மம பக்திஷ்ச்ச ஷீலம் ச் ச்ர்வே தே தே புப்ருதஹ க்ருதம்
இதி புவந்தி ருததி பாஷ்ப கந்த பாஷிணி
உவாச லக்ஷ்மணம் சீதா தீனம் த்யான பராயணம்
சீதாம் மே குரு சௌமித்ரே வ்யஸ்னஸ்யாஸ பேஷஜம்
மித்யாப வாதோபஹதா நாஹம் ஜீவிதுமுத்ஸஹே

பொருள்: அன்புடன் என்னை மணந்து கொண்டீர்கள். அதையும் கவனத்திற் கொள்ளவில்லை. உங்களின் மீது நான் கொண்டுள்ள பக்தியையும் என் நல்லியல்பையும் பின் தள்ளி விட்டீர்கள். ஒரு சேர மறந்தும் விட்டீர்கள்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே சீதையின் நெஞ்சடைத்தது. அழுதபடி கண்ணீர் ஆறாய்ப் பெருக துக்கமும் கவலையுமாயிருக்கும் லட்சுமணனிடம் உடைந்த குரலில் பேசத் துவங்கினாள்.

சுமித்திரையின் மகனே! எனக்கு ஒரு சிதையைத் தயார் செய். எனது துக்கத்திற்கு அதுவே மருந்து. கணவனால் களங்கம் கற்பிக்கப் பட்ட ஒரு பெண் உயிருடன் இருக்க இயலாது.
(பாடல் 16,17,18 ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஏவமுக்தஸ்து வைதேஹ்யா லக்ஷ்மணஹ பர்வீரஹா
சுமர்ஷவஷமாபன்னோ ராகவம் சமுதைக்ஷத
ஸ விக்ஞாய மனஷ்சந்தம் ரமஸ்யாகரசூசிதம்
சிதாம் சகார சௌமித்ரித்புதே ராமஸ்ய வீர்யவான்

விதேக நந்தினி இவ்வாறு கூறிய பின் எதிரிகளைக் கொன்றழிக்கும் லட்சுமணன் தன்னிலை மறந்து ராமனை நோக்கினான்.

ஆனால் ராமனின் சமிக்ஞையிலிருந்து அவரது உள்மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவரது அனுமதியுடன் சிதையைத் தயார் செய்தான்
(பாடல் 20,21ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ராமசரித மானஸில் சுருக்கமான விவரிப்பு வருகிறது:
தேஹி காரண் கருணா அயன்
கஹே குச் துர்வாத்
சுனத் யாதுதானி சகல
லாகி கரண் விஷாத்
ப்ரபு கேவசன் ஸீஸ்கரி சீதா
போலி மன் கரம வசன் புனிதா
லக்ஷ்மண் ஹோஹூ தர்ம கே நேகி
பாவக் ப்ரகட் கரஹூ தும் வேகி

பொருள்: இந்தக் காரணத்தினால் சில கடுமையான வார்த்தைகளை ராமர் கூறக் கேட்டு ராட்சஸிகள் துக்கமுற்றார்கள்.

ரகுநாதரின் வார்த்தைகளைக் கேட்டு சீதை மனம் செயல் வாக்கு ஆகிய மூன்றிலும் தூயதான வார்த்தைகளைப் பேசினாள். “ஓ லட்சுமணா! நீ தர்மத்தின் ஏந்தலாக இருந்து அக்கினியை வளர்ப்பாயாக.”
(பக்கம் 805 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இதைத் தொடர்ந்து சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய அக்கினித் தேவன் அவளை வணக்கத்துடன் ராமனிடம் ஒப்படைத்து விடை பெறுகிறான்.

முதலில் சீதையை அலங்காரமாக வரச் சொல்லிப் பிறகு வானரத்தினர் மற்றும் அரக்கர் அவையில் சீதையை அவதூறான வார்த்தைகளால் ஏசிப் பிறகு அக்கினிப் பிரவேசம் செய்ய ராமன் அனுமதிப்பதைக் காண்கிறோம்.

சமுதாயத்தின் தலைமைப் பீடமாக அதன் சட்டதிட்டங்களை ராமன் மேற்கூறியவாறு செயற்படுத்தி இருக்கும் விதம் ராமாயண காலத்து செங்கோலின் கடுமையை அரசனின் மிகக் குறுகிய அணுகுமுறையைக் காட்டுகிறது. யுத்த காண்டம் ராமனின் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது. அதன் பிறகு உள்ள உத்தர காண்டத்தைக் கம்பர் எழுதவில்லை. ஒட்டக் கூத்தரே எழுதினார். வால்மீகியும் துளசிதாஸரும் உத்தர காண்டத்தையும் கவிதையில் வடித்துள்ளனர்.

அரசன் அரசியின் வழி நிலைநிறுத்தும் கட்டாயப் பண்பாட்டு வழிமுறைகளே உத்தர காண்டத்தின் செய்தி. மேலும் வாசிப்போம்.

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகாரத்துக்கு மிக அருகாமையில் அதைப் பயன்படுத்தும் பெரு வாய்ப்புக் கொண்டோர். இவரால் பாதிக்கப் படுவோரே இன்னொரு சாரார். சமுதாயம் மற்றும் அரசாங்கம் என்னும் இரு முக்கியமான அமைப்புகள் பற்றிய ஒரு கேள்வி எப்போதும் தொக்கி நிற்கும். “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியா? மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழியா?” இதற்கான விடை நமக்கு உத்தர காண்டத்தில் கிடைக்கும்.

உத்தர காண்டத்தை வாசிப்பு வசதிக்காக இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற் பகுதியில் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு பல முனிவர்கள் ராமனை சந்திக்கின்றனர். அப்போது ராவணன், வாலி மற்றும் அனுமனின் தனி வரலாறுகள் நம்முன் வருகின்றன. இரண்டாம் பகுதி யுத்த காண்டத்தின் முடிவில் சீதை அக்கினிப் பிரவேசம் செய்த சூழலின் தொடர்ச்சியாக வருகிறது. லவகுசர்களின் பிறப்பு வளர்ப்பு, மற்றும் ராமனின் அசுவமேத யாகம் வழி தந்தை மகன்கள் சந்திப்பு , பிறகு சீதை பூமித்தாயின் மடியில் மறைதல், இறுதியாக ராமன் மற்றும் சகோதரர்களின் முடிவு ஆகியவை வருகின்றன.

சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும். முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி
(பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந்நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ்விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார்

(பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர்

(பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓதநீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லையென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந்தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை

(பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

பொருள்:
ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய நாட்டு நடப்பு பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள். நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே” என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை. அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை. எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம். இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்

(பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

பொருள்: நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர். அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் கூறியது பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி

பொருள்: தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது. என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது. (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்

பொருள்: (ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. (பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே

பொருள்: கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது. நீ சீதையை அந்த ஆசிரமத்தின் அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே. நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம்

பொருள்: நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும் நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன். (பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ

பொருள்: லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள். மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள். (பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது. இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

இதன் மறுபக்கமாக மக்கள் மன்னனைக் கடவுளுக்கு அடுத்தபடியாக வணங்கினர். மன்னனும் மன்னன் குடும்பமும் நாட்டை வழி நடத்தாத ஒரு சூழலை யாரும் கனவு கூடச் செய்யவில்லை. ஆனால் ஒரே பரம்பரையில் தந்தைக்கும் மகனுக்கும் வெவ்வேறு அணுகுமுறை இருந்ததைப் பின்னர் நாம் விவாதிக்கப் போகிறோம். தனிமனித அணுகுமுறையால் மன்னர் குடும்பத்துக்குள் இருந்த மிகப் பெரிய போராட்டங்கள் பற்றியும் இறுதியாக விவாதிப்போம். மன்னன் செங்கோல் என்னும் அதிகாரத்துடன் அடையாளம் காணப் பட்டானே ஒழிய சமுதாய மறுமலர்ச்சி அல்லது பண்பாட்டுக்குப் புத்துயிர் என்னும் மிகப் பெரிய சிந்தனைத் தடத்துப் பயணங்கள் அவனுடைய தேர் செல்கிற பாதைகளில் இல்லை.

சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான். அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று. அந்த நிலையிலும் அவள் காட்டுக்கு அனுப்பப் பட்டாள்.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட இறுதியில் அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள். மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனைகடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான்

பொருள்: ‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம். ஆயினும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.(பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே
.(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பொருள்: பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும் இருந்தது உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

பொருள்: நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான பூமாதேவி சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச

பொருள்: நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக. (பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி
(பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)
தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத்
(பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

பொருள்: சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால் எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள். (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் ராமனையும் அந்த காலத்து மக்களையும் குறை சொல்லி எளிதாக முடித்து விடலாம். மக்களின் மனப்பான்மை பெண்களை நடத்துவதில் இன்று கூட எந்த அளவு மாறி இருக்கிறது?

பெண்ணின் பிரச்சனைகள், அவருக்குத் தரப்பட வேண்டிய சம நீதி பற்றி மட்டும் பார்க்காமல் சமூக நீதி, மாற்றுத் திறனாளிகள் வாழ்வுரிமை, வறியோரின் அவல நிலை என மிகப்பெரிய பிரச்சனைகள் அவை எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை.

லங்கை சிறை வாசத்திலிருந்து திரும்பி வந்த சீதையை ஏற்பது எவ்வாறு என்னும் கேள்விக்கு கடைசி வரை விடை கிடைக்கவில்லை. அப்போது பூமித்தாயின் மடியில் புதைந்து மறைந்தது சீதை மட்டுமே.

இன்றும் விடை தெரியாத கேள்விகளை சமூகம் புறக்கணிக்கிறது. சீரிய சிந்தனையாளர்கள் அதிகார மையங்கள் முன் கையறு நிலையில் வெட்கமுறுகிறார்கள்.

ராமாயண வாசிப்பை முடித்து விட்டோம். ஒரு மனிதனின் அடையாளம் என்ன தனி மனிதனா அல்லது சமூக அங்கமா என்பது பற்றி அவ்வாசிப்பில் நாம் பெறும் புரிதலை அடுத்த பகுதியில் பகிர்வோம்.

நிறைவாக

இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம்.

‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; நம் பக்கம் நியாயம் இருப்பது வேறு ‘ என்பது ஒரு சிந்தனையைத் தூண்டும் முதுமொழி. ‘என் நியாயம், என் தரப்பு’ என்னும் அணுகுமுறை தனிமனித சிந்தனைத் தடத்தில் உச்சமாயிருப்பது தவிர்க்க இயலாது. அதே சமயம் புதியன- சீரியன சிந்தித்துப் பண்பாட்டுக்குச் செழிப்பூட்டியவர்களே சமுதாய சிற்பிகள். சமுதாயத்தின் நெறிகளை, பாரம்பரியங்களை, வழிநடப்பது மற்றும் கண்டிப்பாக்குவது என்னும் வழிகள் மூலமாக சமுதாயத்தின் அங்கமாகச் செயற்படுவோர் மறுபுறம். இவர்களால் சுதந்திர சிந்தனை அல்லது புது ஊற்றுக் கருத்தாக்கம் என்பவற்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது.

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா? அல்லது சமுதாயத்தின் அங்கமா?” என்ற கேள்விக்கு அமைப்புகளின் தரப்பில் ஒரே விடை தான் – சமுதாயத்தின் அங்கம் மட்டுமே அவன்; தனித்துச் சிந்திக்க, இயங்கத் தேவையில்லை. இந்த இடத்தில் அமைப்பு என்று நாம் குறிப்பிடுவதின் மிகச் சிறிய உதாரணம் குடும்பம். மிகப் பெரியது அரசாங்கம்.

ராமாயண கதாபாத்திரங்கள் பெரும்பான்மையில் சமூக அங்கமாக கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு விதிவிலக்காகச் சில மீறல்களையும் செய்ததையும் அதன் காரணத்தையும் நம் வாசிப்பில் ஒரு புரிதலுடன் விவாதித்தோம்.

நிறைவாக ராமாயண கதாபாத்திரங்கள் (நாம் தேர்ந்தெடுத்தவர்) எந்த அடையாளத்துடன் நம்முன் வருகிறார்கள் என்பதைக் காண்போம். ராமனையும் சீதையையும் இறுதியாக.

(1) லட்சுமணன்: ராமன் என்னும் தலைவனின் விசுவாசமிக்க தொண்டன் என்னும் நிலைக்குத் ‘தம்பி’ என்னும் உறவுமுறையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்கிறான். ராமனின் வழியே ராமனின் கோணத்தில் மட்டுமே அவன் எதையும் அணுகுகிறான். ஆனால் தனித்தன்மையுடன் அவனால் சிந்திக்க இயலும். கைகேயி ராமனை வனவாசம் போகச் சொல்லும் போது ராமன் பணிந்து ஏற்றது போல் லட்சுமணன் அதை ஏற்கவில்லை. பின்னர் ஆரண்ய காண்டத்தில் பரதன் சேனையுடன் வரும் போது முதலில் சந்தேகித்துக் கோபம் கொள்கிறான். இந்த இரு தருணங்களிலுமே அவன் ராமன் அறிவுறுத்தத் தன் நிலையை உடனே மாற்றிக் கொள்கிறான். தலைவன் வழியே என் வழி என்னும் லட்சுமணன் ‘சமுதாய அங்கமே’. ஆனால் விபீடணன் ?

(2) விபீடணன் நிச்சயமாக ‘தனிமனிதன்’ என்னும் அடையாளத்தில் வருகிறான்.
விபீடணன் அந்தக் காலத்து நெறி முறைகளின் படி தலைவன், அரசன் மற்றும் அண்ணன் என்னும் அடிப்படையில் ராவணனுக்குக் கட்டுப்பட்டவனே. ஆனால் தனது தனித்தன்மையை சரியான சந்தர்ப்பத்தில் நிலை நாட்டித் தனது நாட்டிற்குத் தகாத தலைமை இருக்காத படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அதுவும் அந்த முனைப்பைக் காட்டும் காலகட்டம் மிக முக்கியமானது. இந்தத் தனித்தன்மையும் புதிய பாதையில் செல்லும் மன உறுதியும் கண்டிப்பாக பரதனிடமும் தென்படுகின்றன.

(3) பரதன் தசரதன் கொடுத்த வாக்கின் பின் விளைவுகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். அவன் முடிசூட்டிக் கொண்டு ‘பின்னாளில் ராமனிடம் ஆட்சியை ஒப்படைப்பேன். அவன் பெயரால் அவன் வழியில் ஆட்சி செய்கிறேன் என்று கூறியிருந்தாலும் மக்களும் அரசவையினரும் ஏற்றிருப்பர். ஆனால் அவன் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்னும் புதிய ஆட்சி முறையைக் கொண்டு வருகிறான். ராமனுக்கு இணையாக தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கு பரதன் அஞ்சுகிறான். எனவே இப்படி ஒரு திருப்பத்தை அளித்துத் தன்னை சமூக அங்கமாக, தலைவனின் தொண்டனாக, நியாயவழி நடப்பவனாக நிலைநாட்ட மட்டுமே தனது தனித்தன்மை மிக்க சிந்தனையைப் பயன்படுத்துகிறான். எனவே பரதன் சமுதாய அங்கமென்னும் அடையாளத்தை உவந்து அணிகிறான்.

4.சுக்கிரீவன் விபீடணனுடன் ஒப்பிட வேண்டிய தனித்தன்மை மிக்கவன். அவனை சமுதாய அங்கமென்று சொல்லவே முடியாது. அவன் விபீடணனை ஒப்பிடும் போது தனது மன்னனும் அண்ணனுமானவனால் நேரடியாக பழிக்கப் பட்டவன். அது மட்டுமே வித்தியாசம். வேறு எல்லாமே ஒரே போலத்தான்.

5.அனுமனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. சமூகத்தின் அங்கமாகச் செயற் பட்டுத் தலைவனுக்கான விசுவாசத்தில் லட்சுமணனைப் போன்றே செயற்படுகிறான். நேர்மறையாக தனித்தன்மையுடன் செயற்பட வேண்டிய வழியைப் பற்றி தலைவியான சீதை அறிவுறுத்தும் போது மட்டுமே விழிப்படைகிறான். தனியான ஒரு விழிப்பையோ தடத்தையோ அவன் தனது வழிமுறையாகக் கொள்ளவில்லை.

6.வாலி ஆற்றல் மட்டுமே உள்ள ஒரு தலைவனாகச் செயற்படுகிறான். சமுதாயத்தின் தலைமை சமுதாய நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்னும் அளவு தனித் தன்மையுடனான சிந்தனை உள்ளவன். அதன் முடிவை மட்டுமே அவன் சந்தித்தான். ஏனெனில் மனமாற்றம் அவனிடம் ஏற்பட வாய்ப்பில்லை.

7.ராவணனது தனித்தன்மை தனது பேராற்றலின் அடிப்படையில் தன்னை ஒரு ஆதிக்க சக்தியாய் தன்னிகரும் எதிர்ப்பும் இல்லாதவனாக நிலை நாட்ட முயற்சித்ததாகும். தன்னை வெல்லும் ஒரு மகாசக்திமுன் அவன் வீழ்ந்து விடுகிறான்.

8.மாரீசனும் கும்பகர்ணனும் தனித்தன்மையுடன் நேர்வழி பற்றிய தமது கருத்துக்களை ராவணனின் முன் வைக்கிறார்கள். ஆனால் அவன் அவற்றை நிராகரிக்கும் போது சமுதாய அங்கமாக மன்னனின் வழியில் மன்னனுக்குக் கட்டுப்பட்டு தம் இன்னுயிரையும் தியாகம் செய்கிறார்கள்.

9.கைகேயி மட்டுமே இயல்பான தனித் தன்மையுடன் இயங்குகிறாள். கொடுத்த வாக்கைக் காப்பதும் தர்மமே. மூத்த மகனுக்கு முடி சூட்டுவதும் தர்மமே. இவற்றுள் தனது தரப்பை நிலை நாட்டும் தனித்தன்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். இதை ராமாயணம் எவ்வாறு எதிர் கொள்கிறது? தனித்தன்மை மிக்க ஒவ்வொரு கதா பாத்திரமும் ஒரு திருப்புமுனையை நிகழ்த்துவதை நாம் காண்கிறோம்.

10.கௌதமரும் விசுவாமித்திரரும் நேர்மறையான தனித்தன்மைமிக்க செயலுக்காக நம் கவனத்தைப் பெறுகிறார்கள். அகலிகை தவறிழைத்திருப்பினும் சாப விமோசனத்துக்குப்பின் அவள் ஏற்கப்பட வேண்டும் என்னும் கருத்தை கௌதமரிடம் விசுவாமித்திரர் முன்வைக்க கௌதமரும் அதை ஏற்கிறார். கைகேயியின் எதிர்மறையான தனிமனித (தன்னிச்சையான) நடவடிக்கையும் விசுவாமித்திரர் மற்றும் கௌதமரின் தனிமனித வழி அல்லது புரட்சிகரமான தனி வழி பற்றி இறுதியில் விவாதிப்போம்.

11. ராமன் ஒரு மன்னனை எப்போதும் எந்தக் காரணத்துக்காகவும் சமாதானமே செய்து கொள்ளாத , சமுதாயக் கட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகளைத் தாண்டாத நேர்வழி செல்லுவோனாக மட்டுமே கண்டான். இதற்கு ராமன் தசரதனை முன்னுதாரணமாகக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. வேறு முன்னோர் யாரையேனும் மனதில் கொண்டிருக்கலாம். ஏனெனில் ஏக பத்தினி விரதம் என்பது தசரதன் வழிக்கு முரண்பட்டது. இன்னொரு வேறுபாடு தசரதன் மனைவி தரப்பு வாதங்களைச் செவி மடுத்தார். ராமன் அவ்வாறில்லை. ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. ராமன் சீதையை மணப்பதற்கு முன்பே விசுவாமித்திரர் அறிவுறையில் கௌதமர் அகலிகையை ஏற்பதைக் கண்ணெதிரில் காணக் கிடைத்தவன். பின்னரும் தனது வழியை சமுதாயப் பாரம்பரிய நிலை நாட்டுதல் என்று கடுமையாகக் கடைப்பிடித்தான். முன்னுதாரணமான ஆணாகவும், கணவனாகவும், மன்னனாகவும் மட்டுமே ராமனால் இருக்க இயலும். அதில் பிறழ்ந்து அதன் பின் விளைவுகளைத் தன் பெயரால் வரலாறு சந்திப்பதை ராமன் கண்டிப்பாக விரும்பவில்லை. ராமனின் கடுமை அரசியல் அல்லது அதிகார மையங்களுக்கு ஒரு வழி காட்டுதலே.

12. சீதை ஆணும் பெண்ணும் தந்தையும் தாயுமாகும் குடும்பத்தில் தம் பங்களிப்பைச் செய்யும் பெண்ணாக மட்டுமே தன்னை உணர்ந்தாள். அதற்கு வழியில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் ராமனைப் பிரிந்து செல்ல அதற்கும் மேலாகத் தனது இரு குழந்தைகளையும் கூடத் துறந்து செல்லத் தயாராகிறாள். சீதை பூமியில் மறைந்த அற்புதத்தை நீக்கிப் பார்ப்போம். அவள் கணவனையும் குழந்தைகளையும் துறக்கத் துணிந்த அந்த ஒரு கணம் ஒரு நேர்மறையான மீறல் நிகழ்ந்தது. அரக்கிகளைக் காக்கத் தனது அரசி என்னும் நிலையை மீறி இரக்கப்பட்ட சீதையும் இந்த சீதையும் இந்தியப் பெண்களின் குணங்களில் முக்கியப் பங்குள்ளவர்கள்.

பாரம்பரியத்துக்குக் கட்டுப்பட்டு சமுதாய அங்கமாக இயங்கிய அதே சமயம் வரலாறு போற்றும் தனித்தன்மையை நிலைநாட்டிய சீதையைப் போன்று இரு பரிமாணங்களுடன் ராமாயணத்தில் வேறு யாரும் இல்லை. அவச் சொல்லுக்கு சீதையும் அஞ்சவே செய்தாள். அதே சமயம் அநியாத்தைத் தட்டியும் கேட்ட சீதை இந்தியப் பண்பாட்டின் மிகப் பெருமைக் குரிய முன்னோடி. ஒரு பெண்ணின் சங்கடங்களையும் அவளது மன உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத சமுதாயத்தை உலகின் முன் முதன் முதலாகத் தோலுரித்துக் காட்டிய சீதை வரலாற்று நாயகி.

ராமாயணத்தின் தேர்ந்தெடுத்த 12 கதா பாத்திரங்களில் யார் சமூக அங்கம் யார் தனித்த அடையாளம் காட்டினார் எனக் கண்டோம்.

வாசகர்கள் கைகேயி கெட்டவள் என்றும் அவளது கோரிக்கைக்குப் பிறகு ராமாயணத்தில் சோகமே எஞ்சியது என்றும் வாசித்தால் அது மிகவும் மேம்போக்கான வாசிப்பு. ராமாயண காலத்தில் கைகேயி செய்த எதிர்மறையான மீறலும் முடிவில் பூமியில் மறையும் போது சீதையின் நேர்மறையான மீறலும் வெவ்வேறு பின்னணியிலானவை. வெவ்வேறு திசையிலானவை. என்றாலும் சுதந்திர சிந்தனையின் கூறுகள் அந்தக் காலப் பெண்களிடையே இருந்தது என்பதே நாம் புரிந்து கொள்வது. உத்தர காண்ட இறுதியில் ராமன் தன் தம்பி மகன்கள் மற்றும் தன் பிள்ளைகளுக்கு சமமாக அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கிறான். இதை தசரதன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே? வரலாற்றை எழுதுமளவு கைகேயியின் தனித்தன்மை திறன் பெற்றிருந்தது.

நுட்பமாக கவனிக்கும் போது மனிதனின் எந்த அடையாளம் ராமாயணத்தின் தேர்வு தனிமனிதனா சமூக அங்கமா என்பதில் தனித்தன்மையுடன் இயங்கிய கைகேயி, சுக்ரீவன், விபீடணன் மற்றும் சீதையே ராமாயண வரலாற்றின் திருப்பு முனைகளில், சிக்கல்களின் தீர்வுகளில் பெரும் பங்காற்றினார்கள். மன்னனான ராமனால் இயலாமற் போன பெண்ணுக்குரிய இடத்தை உறுதி செய்யும் பணியை விசுவாமித்திரரும் கௌதமரும் தனித்தன்மையை வெளிப்படுத்தி நேர்மறையான ஒரு மீறலில் நிகழ்த்திக் காட்டினர்.

ராமாயண காலத்தில் ரிஷி முனிவர்- இன்று எழுத்தாளர், ஆசிரியர், பல்துறை அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரே சமுதாய மாற்றத்துக்கு வழி கோல வேண்டும்.

நமது எளிய தேர்ந்தெடுத்த ஒரு குறிப்பிட்ட திசையிலான வாசிப்பின் வழி ராமாயணத்தின் செய்தி இதுவே. ராமாயணம் சொல்ல வந்ததின் ஒரு பகுதி இது.

ஆனால் அது சொல்லாமலே விட்டு விட்ட ஒரு சோகத்தை பல நூற்றாண்டுகள் கழித்து ‘ஊர்மிளையின் விரகம்” என்னும் ஒப்பற்ற காவியமாக வடித்தார் ஹிந்தி மொழியின் செவ்விலக்கிய காலத்து “மைதிலி ஷரண் குப்த்” என்னும் கவிஞர். ஊர்மிளை லட்சுமணனின் மனைவி. ராமன் இருக்குமிடம் அயோத்தி என சீதை அவனுடனேயே வனம் புகுந்தாள். பரதனின் அல்லது சத்துருக்கினனின் மனைவிகள் தம் கணவரைப் பிரியவில்லை.

ஊர்மிளைக்காக எந்த ராமாயணமும் அவளது தியாகத்தைப் பதிவு செய்யவில்லை. சீதையும் மண்டோதரியும் திர்சடையும் பாடப்பட்டனர். ஊர்மிளையின் தியாகமும் சோகமும் விரகமும் சமுதாயம் காணாதவை.

அதிகார மையமாக அல்லது அதன் பீடமாக இருந்தோரே தனது பாதிப்பின் மூலமாக சமூகத்தின் அங்கமாகத் தன்னை நத்திக் கொள்வோரை கட்டுப்படுத்தியவர் அல்லது மீறலை நோக்கித் தள்ளியவர்.

வரலாறு பெரிதும் இவர்கள் பற்றியதே. ஊர்மிளை போன்று பல சாதிகள், பல நலிந்த பிரிவினர் சமுதாயத்துக்காகப் பங்காற்றிப் பெயரற்றுப் போன தியாகிகள் உள்ளனர். வரலாற்றை மறு வாசிப்புச் செய்யவும் கூர் வாசிப்புச் செய்யவும் நாம் பழக வேண்டும்.

ஊர்மிளையின் உதாரணத்திலிருந்து ராமாயணம் தொடங்கி வைத்த கேள்விகள் ஒன்றுக்கும் மேற்பட்டவை என்று அறிகிறோம். விடைகளை நாம் ஏன் தேடவே இல்லை என்பதே பல தலைமுறைகளாகத் தொடரும் கேள்வி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s