தாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்-பெரியார்

தாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்-பெரியார்

தாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்

பெரியோர்களே! தாய்மார்களே! தோழர்களே! நாகரசம்பட்டி, மத்தூர் முதலிய இடங்களில் நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும் புதிய ஒரு மாறுதலான முறையில் நடந்து வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனடிப்படையில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதே இந்நிகழ்ச்சியாகும்.

தாய்மார்களே! பெரியோர்களே! புதிய முறைத் திருமணம் என்கின்ற பெயரால் நடைபெறும் திருமணம் என்றாலும் கூட, இதில் வாழ்த்துக் கூறுவது என்கின்ற மூடநம்பிக்கையை இன்னும் போக்க முடியவில்லை. மக்களுக்கு அறிவு வந்தால் தான் இதனைப் போக்க முடியும். அதுவரை இந்த வாழ்த்து கூறுதல் என்ற முறை இருந்துதான் வரும். என்னைப் பொறுத்த வரை இந்த வாழ்த்துக் கூறுவதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை கிடையாது.

நாங்கள் தோன்றி இம்முறையைக் கொண்டு வரும் வரை, பார்ப்பானைக் கொண்டு வந்து வைக்கணும்; நெருப்பைப் போட்டுக் கொளுத்தணும். பானையை அடுக்கணும்; குளிப்பாட்ட வேண்டும் என்று சரியாக நாள் முழுவதும் வேளை இருக்கும்படியாகக் காரியங்களை அமைத்துக் கொண்டு செய்யப்படுவதையே திருமணம் என்று கருதி வந்தனர். நாங்கள் தோன்றிய பின் அதுவும் இம்முறைகள் எதற்காகத் தேவை? இவை இல்லாவிட்டால் என்னக் கெட்டு விடும் என்று யோசித்து, அதனால் எந்தக் கேடும் இல்லை என்று உணர்ந்து மாற்றிய பின் தான் பழைய முறை சிறிது சிறிதாக மறைந்து வருகின்றது.

பழைய முறைகள் என்பது மூன்று காரியங்களைத் தான் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்குவது என்பது முதல் காரியமாகும். ஆண்கள் எவ்வளவு கொடுமைகள் செய்தாலும், பெண்கள் அதனைப் பொறுத்துக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள். அடித்தாலும், கொலை செய்தாலும் அவனை எவரும் கேட்க முடியாது. அவன் தன் மனைவியை எதுவும் செய்ய உரிமையுடையவனாவான். ஆண் இறந்து விட்டால் அவன் மனைவியையும், அவனோடு சேர்ந்து சாகடிக்கப்பட வேண்டும். இது “உடன்கட்டை ஏறுதல்” என்ற பெயரால் நடைபெற்று வந்தது. பெண்களுக்குச் சொத்தில் உரிமை கிடையாது. ஆண் இறந்தால் அவன் மனைவி மறுமணம் செய்து கொள்ளக் கூடாது. இப்படிப் பல கொடுமைகளைப் பெண்கள் ஏற்கத் தான் வேண்டும். இது பெண்களை அடிமையாக்குவதற்கும், நிரந்தர வேலைக்காரியாக்குவதற்கும் என்றே ஏற்பாடு செய்யப்படடதாகும்.

இரண்டாவதாக, மக்களிடமிருக்கும் முட்டாள் – மூட நம்பிக்கையினை வலியுறுத்தவும், நம் மக்களிடமிருக்கும் ஜாதி இழிவினைக் காப்பாற்றவும், பார்ப்பானுக்கு நாம் நிரந்தர அடிமை என்பதனை வலியுறுத்துவதுமான மூன்று அடிப்படைக் கொண்டதனால் இவற்றை நாம் மாற்றியமைக்க வேண்டுமென்று கருதினோமே தவிர, வேறில்லை. புதிய முறை என்பதால் இங்கு ஆணுக்கும், ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை. புதிய முறையானாலும் நாம் ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் திருமணம் செய்கின்றோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. செய்யும் முறைகள், சடங்குகளில் தான் மாற்றம் செய்திருக்கிறோம்.

மணமக்கள் வரவிற்குள் செலவிட வேண்டும். வரவிற்கு மேல் செலவிடுவதால் நம் நாணயம், ஒழுக்கம் எல்லாம் கெட்டு விடுவதோடு, பிறரிடம் சென்று கடன் வாங்கும் நிலையினையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்நிலை கூடாது. இரண்டாவது அதிகப்படியான பிள்ளைக் குட்டிகளைப் பெற்று அல்லலும், அசவுகரியமும் அடைவதோடு பொது ஒழுக்கமும் பாழாகும்படிச் செய்யக் கூடாது.

நான் 30 ஆண்டுகளுக்கு முன் சொன்ன – பெண்கள் 20-வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற – கருத்து இன்று அரசாங்கத்தால் சட்டமாக்க இருக்கிறது. நான் மேல் நாட்டெல்லாம் சுற்றி இருக்கிறேன். நான் வெளிநாட்டில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். அந்த வீட்டில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும், தாயாரும் இருந்தார்கள். அந்தப் பெண் யாரென்று கேட்டேன். (Proposed Wife) மனைவியாக ஏற்றுக் கொள்ள இருக்கிற பெண் என்று அந்த ஆண் கூறினான். இப்படி 5-வருடமாக வாழ்க்கை நடத்தி வருகின்றார்களே என்றேன். எங்கள் அரசாங்க சட்டப்படி பெண்ணிற்கு இன்னும் 20-வயது ஆகவில்லை. 20-வயது ஆன பின் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறினான். இப்படித் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்துவதால் அவர்கள் குழந்தை பெறுவது கிடையாது. சம்பளமும் அதிகம் பெறுகின்றனர். அதனால் அவர்கள் சராசரி 75-வருடம் வாழ்கின்றனர். நம் நாட்டின் சராசரி வயது 32-இல் இருந்து இன்று 50-வருடமாக ஆகி இருக்கிறது. இன்னும் 10-ஆண்டுகள் போனால் நாமும் மேல்நாட்டின் நிலையை அடைவோம்.

மற்றவர்கள் நம் வாழ்வை  குடும்பத்தைப் பார்த்துக் குறை சொல்லாத அளவு நடந்து கொள்ள வேண்டும். இப்போது பார்ப்பான் செய்து வரும் செயல்களால் மக்களின் பொது ஒழுக்கம் மிகவும் குறைந்து விட்டது. நம் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு திரிகின்றனர். இது ஒழிய வேண்டும்.

மூட நம்பிக்கை பெண்களிடம் தான் அதிகம். சாமி கேட்பது, ஜாதகம் பார்ப்பது, குறி கேட்பது முதலிய காரியங்கள் நடைபெறுகின்றன. பெண்கள் வீட்டில் அடைபட்டுக் கிடப்பதால் தான் இவை எல்லாம். நம் நாடு சுதந்திரம் பெற்றது, முன்னேறியுள்ளது என்று சொன்னாலும், எத்தனைக்கெத்தனை மூட நம்பிக்கை வளர வேண்டுமோ, அந்த அளவு வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. தினம் ஒரு கோயிலும், சாமியும் தோன்றிக் கொண்டுதானிருக்கின்றன. பலர் மடையர்களாக இருந்தால் தான் சிலர் வாழ முடியும். அதனால் சிலர் பலரை முட்டாளாக்கும், மூட நம்பிக்கைக்காரர்களாக்கும் காரியங்களைச் செய்து வருகின்றனர். நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத்துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில் தான் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். தாய்மார்கள் தான் குழந்தைகளிடம் அதிக நேரம் பழகும் வாய்ப்புள்ளவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை மூட நம்பிக்கையற்றவர்களாக, அறிவுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

நாம் மாற்றம் பெற வேண்டுமானால் நம் நாட்டு மக்களைப் பார்க்கக் கூடாது. மேல் நாடுகளில் உள்ள மக்களைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

———————– 21.08.1967 அன்று தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ‘விடுதலை’ 26.08.1967

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s